அன்புள்ள அம்மாவுக்கு......



இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார் .அம்மா இது உண்மைதான் என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன் .இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன் .என்னுடைய தம்பிகளுக்கும் அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததை கண்டு நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை .அம்மா அதே நேரத்தில் என் மீதும் கோவம் கொள்ளாதே .மகனாக. என்னை நீ பெற்றெடுத்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பாய் .நானோ உன்னுடைய மகளாகவே வளர்ந்த்தேன் ,மகளாகவே வாழ்வேன் ,மகளாகவே இறப்பேன்.







அம்மா. உனக்கும் எனக்கும் இடையே இருக்கிற பிரிவுக்கு நீயும் நானும் காரணம் அல்ல .உண்மையான காரணம் இத்தேசம் .உண்மைதான் அம்மா .நம் இருவரைப் பிரிப்பதில் இத்தேசம் உள்ளூர மகிழ்வத்காகவே நான் உணர்கிறேன் .உன்னை சுற்றி கட்டியெழுப்ப பட்டிருக்கும் போலியான கௌரவத்திற்கு கடந்த கால ஆட்சி முறைகளைப்போலவே இந்த "ஜனநாயக "ஆட்சிமுறைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது .

நான் பாலினம் மாறி பிறந்தது உன் தவறோ என் தவறோ நம் தலைமுறை தவறோ அல்ல .அது இயற்கை விதி .இவ்விதியை இவ்வுலகிற்கு சொல்லவேண்டிய இத்தேசம் தன் கடமையிலிருந்து நழுவுகிறது .இதனால் உன் மகளைப் போன்ற பாலினம் அனுபவிக்கும் கொடுமையை எழுத்தில் அடங்காதது .பிச்சையெடுத்தலும் பாலியல் தொழிலும் என் பாலினத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொடுங்கோண்மை அதிலிருந்து என் சமூகத்தை மீட்கவே நாங்கள் விரும்புகிறோம் .என்னைப் போலவே என் சமூகம் அனுபவிக்கும் துக்கங்கள் ஏராளாம் .

அம்மா ...நாம் வாழுகின்ற இந்த மனித சமூகம் ஆதிக்கத்தை எதிர்த்த போர்களினால் ,போராட்டங்களினால் தன்னை புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது என்பது வரலாறு அந்த வரலாறு நெடுக அடிமைப்பட்ட சமூகங்கள் ஆளும் கொடுங்கோண்மையை எதிர்த்து மாணுட ஞாயம் தாங்கிய பதாகையை தான் உயர்த்திப் பிடித்தது .அந்தப்பதாகையை இப்போது எங்கள் சமூகமும் உயர்த்திப் பிடிக்கிறது .

ரோம் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராய் ஸ்பார்டகஸ், ஜீசஸ், உழைப்புச்சுரண்டலுக்கு எதிராய் கார்ல்மார்க்‌ஸ் ,பாலின ஆதிக்கத்திற்கெதிறாய் க்ளாரோ ஜெட்கின் ,சாதிய ஆதிக்கதிற்கெதிறாய் அண்ணல் அம்பேத்கர், மத ஆதிக்கதிற்கெதிறாய் பெரியார் ஆகியோர் உயர்த்திப் பிடித்த மானுடநியாயத்தை பேசும் அந்த பதாகையை இப்போது நாங்கள் உயர்த்திப் பிடிக்கின்றோம் .நாங்களும் மானுடமே என்பதனை இந்த உலகத்திற்கு உறக்கச்சொல்கின்றோம் .

அம்மா...என் பாலினச் சமூகம் துவங்கியிருக்கிற விடுதலைக்கான இந்தப்போரட்டம் நம் குடும்பத்தை சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் போலி கௌரவ சுவரை தர்த்தெரியும் என்ற நம்பிக்கையுடனே!!! நான் போராட்டங்களில் கலந்து கொள்கிறேன் .
அப்போதெல்லாம் நான் காணும் கனவு இதுதான் "என் சமூகம் நிச்சயம் விடிதலையடையும் அப்போது நீ என்னை ஏற்றுகொள்வாய்.இதுவரையில் உன் இதயத்தில் நீ அடக்கி வைத்திருந்த தூய பாசத்தை என் மீது பொழிவாய் .நான் உன்னைக் கட்டியணைப்பேன் உன்னை முத்தமிடுவேன் .உன்னோடும் அப்பாவோடும் ,அண்ணனோடும் தம்பிகளோடும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பேன் .உனக்கும் அப்பாவுக்கும் நான் மகளாக இருந்து பணிவிடை செய்வேன் "

இந்த கனவே என்னை இயக்குகிறது .இந்த கனவே என்னைப்போராட வைக்கிறது .

இந்தக்கனவு எழுந்து மறைந்த அடுத்த கனமே இந்த ஜனநாயக தேசத்தின் மீது உச்சபட்ச அருவருப்புத்தோன்றும் .இது ஜனநாயகத் தேசம்தான என்ற சந்தேகமும் எழும் .நிச்சயமாக எங்களின் விடுதலையெல்லாம் நீயும் நானும் சேராமல் முழுமையடையாது .

உழைப்பைச் சுரண்டுவது மட்டுமல்ல உணர்வைச்சுரண்டுவதும் சுரண்டலே என்று நாவலாசிரியர் ஜெயகாந்தன் கூரியதாக எங்கோ படித்த நியாபகம் .உண்மைதான் உணர்வுச்சுரண்டலில் அதிகம் சுரண்டப்படுவது எங்கள் பாலினமே !!எங்களின் உணர்வுகள் சுரண்டப்பட்டு வெறும் நடைபிணங்களாகவே நாங்கள் இத்தேசத்தில் அழைகின்றோம் அம்மா ...

அம்மா...
எனக்கு நீ வேண்டும்
உன்னுடைய பாசமும் அப்பாவின் நேசமும் வேண்டும் .அண்ணன் தம்பிகளோடு கூடி விளையாட வேண்டும் யாரும் என் பாலினத்தை கொச்சைப்படுத்தாமல் இருக்கவேண்டும் அதற்கு இந்த ஜனநாயக முழுமையடைய வேண்டும்
திருநங்கையர் ,திருநம்பியர்க்கு இடஓதுக்கீட்டை வழங்கவேண்டும்.

என்றாவது ஒருநாள் உன் குரலை மறுபடியும் கேட்பேன் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன் அம்மா..


...மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016