மாற்றுப் பாலினத்தோரின் உடலியங்கியலில் குழம்பி நிற்கும் உலக ஜனநாயகம்…! அதில் விஞ்சி நிற்கிறது ட்ரம்பின் அதிகாரம்..!

மாற்றுப் பாலினத்தோரின் உடலியங்கியலில் குழம்பி நிற்கும் உலக ஜனநாயகம்…! அதில் விஞ்சி நிற்கிறது ட்ரம்பின் அதிகாரம்..!
 பிரபஞ்ச ஆய்வு,பரிணாம ஆய்வு என பல்வேறு ஆய்வுகளில் படிப்படியான முன்னேற்றத்தை அடைந்து வரும் மனித சமூகத்தின் இன்றையக் கட்டமான ஜனநாயக வடிவம்.மாற்றுப் பாலினத்தோரின் உடலியங்கியலில் குழம்பிய ஒரு புரிதலில், அக்கறையற்றும் வெறுப்புற்றுமே காட்சியளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நம்முடைய நாடாளுமன்றத்தில் ’மாற்றுப் பாலினத்தோர் மசோதா 2016’ கேட்பாரறற்றுக் கிடப்பது,அச்சபையில் ஆளுமைப் புரியும் அக்கணவான்களின் வெறுப்பையே நமக்கு பிரதிபளிக்கிறது. இத்தகைய வெறுப்பின் பிரதிபளிப்பைத் தான் அமெரிக்க ஜனநாயகத்தை தற்போது வழி நடத்திக் கொண்டிருக்கும் டெனால்ட் ட்ரம்ப் அவர்களும் ஓர் அறிவிப்பின் மூலம் செய்திருக்கிறார்.

 Image may contain: 1 person, sitting and screen
’’அமெரிக்க ராணுவத்தில் “எந்த விதத்திலும்” திருநங்கைகள் பணியாற்ற முடியாது ’’.என்றும் அதற்கான காரணமாக “ இவர்கள் ராணுவத்தில் பணியாற்றுவதினால் வியக்கத்தக்க அளவில் மருத்துவ செலவுகளும், இடையூறுகளும் ஏற்படுகிறது”என்றும் கூறுகிறார்.அவருடைய விசித்திரக் கருத்தின் உள்ளடக்கத்தில் எவ்வளவு பெரிய பாலின தீண்டாமை உள்ளடங்கியிருக்கிறது.! கடந்த ஆண்டு ஒபாமா அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் வெளிப்படையாக சேவை செய்ய அனுமதித்தார்…!தற்போது அதை ட்ரம்ப் நிராகரித்திருக்கிறார்.இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் 12 லட்சம் ராணுவத்தினரில் 2450 திருநங்கைகள் தங்களின் ராணுவப் பணியை இழக்கிறார்கள்.! இந்த இழப்பு வெறும் பணி இழப்பு மட்டும் அல்ல.இது சமூக மதிப்பிழப்பு..!மாணுட அங்கீகாரமிழப்பு…! பல நேரங்களில் ராணுவ,வணிக கொள்கைகைகளில் அமெரிக்காவை முன் மாதிரியாக கொண்டு செயல்படும் இந்திய அரசு ட்ரம்பின் இந்த அறிவிப்பை முன் மாதிரியாக கொண்டு செயல்பட்டால்….? பல ஒப்பந்தங்களில்,செயல் திட்டத்தில் பிண்ணிப் பிணைந்திருக்கும் இங்கிலாந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பை வரவேற்றால்….? என்னாகும்…? ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கிடப்பில் இருக்கும் ’’மாற்றுப் பாலினத்தோர் பாதுகாப்பு மசோதா’’ ட்ரம்பின் அறிவிப்பால் உயிர்த்தெழாமல் பிணமாகுமோ..! என்ற எண்ண ஓட்டம் என் சிந்தையை குடைந்து கொண்டிருக்கிறது…! அந்த அறிவிப்பால்… இந்தியாவிலேயே தமிழகத்தின் தருமபுரி காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் என் பாசத்திற்குரிய தோழி பிரித்திகா யாஷினி யின் அந்த இனிய சுயமரியாதை மகிழ்ச்சிக்கு ஊறு விளையுமோ….? இந்தியாவிலேயே முதல் பொறியியல் மாணவியாக கல்லூரிக்குச் சென்று தற்போது அப்படிப்பை நிறைவு செய்திருக்கும் எனக்கு அந்த அறிவிப்பு, நான் கற்பனை செய்திருக்கும் மகிழ்வான எதிர்காலத்தை கரும் திரையிட்டு மறைக்கும் பெரும் தடையாகுமோ….! இத்தேசத்தில் முதன் முறையாக தன் சுய பாலின அடையாளத்துடன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுற்று தற்போது மருத்துவம் படிக்க காத்துக்கொண்டிருக்கும் அன்பு மகள் தாரிகா பானுவின் முயற்சியெல்லாம் தகர்ந்து போகுமோ…! இங்கிலாந்தில் கடந்த ஆண்டு முதல் திருநங்கை ராணுவ அதிகாரியாக  பொறுப்பற்று  கம்பீரமாய் தன் படையை வழிநடத்திக் கொண்டிருக்கும் ஹன்னா விண்டர்போர்னின் கம்பீரம் தளருமோ….! என்றெல்லாம் நினைக்கும் போது என் இதயம் பதறுகிறது…!பிச்சையும் பாலியல் தொழிலும் நிரந்தரம் தானோ என்று என் நெஞ்சம் நெருப்பில் இருப்பதுபோல் சுடுகிறது…! ஒபாமாவின் அறிவிப்பை ட்ரம்ப் தகர்கலாம்..! இடப்பங்கீடு உட்பட திருநங்கையரின் பல்வேறு உரிமைகளை உள்ளடக்கி,நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் துளி எதிர்ப்பும் இன்றி முழுதாய் நிறைவேறிய திருச்சி சிவா அவர்களின் அந்த தனி நபர் மசோதாவை நிராகரித்து, இடப்பங்கீடற்ற ஒரு மசோதாவை மக்களவையில் தக்கல் செய்ய உருவாக்கி வைத்திருக்கலாம் என்பவை தான் ஜனநாயக ஆட்சியின் லட்சணமோ…? உலகின் ஜனநாயக அரசுகள் எங்களின் பாலினத்தைப் பற்றி என்ன வரையறை வைத்திருக்கிறது…! ஆட்சிக்கொரு வரையறை வகுத்திட நாங்கள் மாணுடமா அல்லது பண்டமா..? பிரபஞ்சத்தில் சரஸ்வதியின் நட்சத்திர கூட்டத்தை கண்டுணரத் தெரிந்த அரசுக்கு எங்கள் உடலியங்கியலை உணர்ந்து ஏற்பதற்கு எது தடுக்கிறது..! ட்ரம்பின் அந்த விசித்திர அறிவிப்பு எதை சொல்ல வருகிறது 


ஆண்,பெண்ணை விட எங்களுக்கு வயிறு பெரியது..!நாங்கள் அத்தேசத்தின் உணவை அதிகமாக தின்று தீர்கிறோம் அதனால் அதிக செலவாகிறது என்று சொல்ல வருகிறதா…! அல்லது ஆண்,பெண்.ராணுவத்திணரை விட எங்களுக்கு ஊதியம் அதிகமாக கொடுக்கப்படுகிறது என்று சொல்ல வருகிறதா…? ஆண்கள்,பெண்களைப் போல எங்களுக்கு தனியே கழிப்பறை கட்டுவதனால் அதிகம் செலவாகிறது என்று சொல்ல வருகிறதா,,,? எதை செலவீனம் என்று சுட்டுகிறது ட்ரம்பின் விசித்திர அறிவிப்பு. எக்காரணத்தையும் சுட்டாமல் எங்கள் பாலினத்தின் மீது வன்மத்தைப் பொழிந்திருக்கிறார் டெனால்ட் ட்ரம்ப். அந்த வன்மம் உலகில் பரவாமல் தடுப்போம்..! பாலின சமத்துவமே உண்மையான ஜனநாயகம் என்று உலகிற்கு உரைப்போம்..!





Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016