சாதியை ஒழிப்போம்!!கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்!!!

வாசபூக்களை கூந்தலில் சூட எம் பெண்களுக்கு பேரார்வம்மில்லை ஆம் உங்கள் மலத்தின் துற்வாடையை தோற்கடிக்காது அப்பூக்கள் வாசம்.
”இந்த நாட்டிலே வர்க்கம் இருக்கிறது.அதன் பக்கத்திலே சாதியும் இருக்கிறது.இங்கே காற்றுக்கும் பாசன கால்வாய்களுக்கும்,விளையும் பூமிக்கும்,கோவிலுக்கும்,குளத்திற்கும்,பள்ளிக்கூடத்திற்கும்,ஊர் பொது இடத்திற்கும்,உண்ணும் உணவிற்கும்,குடிக்கும் தண்ணீருக்கும்,உடுத்தும் உடைக்கும்,பேசும் மொழிக்கும்,இலக்கியத்திற்கும்,கலாச்சாரத்திற்கும்,அரசிற்கும்,அதன் சட்டத்திற்கும்,நீதிக்கும்,நீதி மன்றத்திற்கும்,பிணத்திற்கும்,மயானத்திற்கும்,சாமிக்கும்,,பேய்க்கும் கூட சாதி இருக்கிறது.” என்று சாதியத்தின் இயங்கியலை தன் எழுத்தில் கோபமாய் வரைந்திருப்பார் ஆந்திர எழுத்தாளர் ஜி.கல்யாண ராவ் அவர்கள்.
அவரின் இந்தக் கோபக் கோவையில் ’’மனித கழிவிற்கும் சாதி இருக்கிறது’’ என்பதையும் சேர்க்க விரும்புகிறேன்.
இன்றும் கூட அந்த காட்சி என் மனதை விட்டு அகலவில்லை.நான் அப்போது ஐந்தாம் வகுப்புப் படிக்கிறேன்.என் சொந்த கிராமமான புதூர் பாண்டியாபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு வீடு மாறினோம்.அது ஒரு தனியார் பள்ளி.கிராமங்களில் திறந்த வெளி கழிப்பிடங்கள் தான்.உலர் கழிப்பிடங்களை அந்த பள்ளியில் தான் நான் கண்டேன்.ஒரு குறிப்பிட்ட சதுரப் பரப்பைச் சுற்றி பெரிய மதில் சுவர் எழுப்பியிருப்பார்கள்.மதிலினுள்ளிருக்கும் அந்த சதுர பரப்பில் தான் மாணவர்கள் மலம் கழிக்க வேண்டும்.பிறகு அந்த மலத்தை வெளியிலிருந்து வரும் ஒரு அருந்ததியப் பெண்மணி தான் கூடையில் அள்ளுவார்.அன்றைக்கு அவர் வரவில்லை.அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த என் வகுப்புத் தோழி இசக்கியம்மாளை தலைமையாசிரியர் அழைத்து அந்த மலத்தை சுத்தம் செய்யசொன்ன போது இசக்கியம்மாளின் முகமே மாறிப் போனது.எவ்வளவு பெரிய வன்கொடுமையை 5 ஆம் வகுப்புப் படிக்கும் என் இசக்கி சுமந்தாள்.இன்று வரையில் என் மனதில் ஆறாத வடு அது.அந்த கொடிய நிகழ்வை இப்போதும் கூட நினைவு கூற நேர்கையில் என்னுள் ஆத்திரம்,அருவெருப்பு,அழுகை அனைத்தும் சேர்ந்தே எழும். ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக உரிமைகளை,கல்வியை,அதிகாரத்தைப் பறித்துக் கொண்டு எவ்வளவு வஞ்சகமாய் மலத்தை மட்டும் அவர்கள் மீது திணித்திருக்கிறது இச் சாதி தேசம்.
குடலினால் உணவின் ஊட்டச் சத்து உறிஞ்சப்பட்டு,உறிஞ்சப்படாதா எஞ்சியிருக்கும் சக்கைப் பகுதியே மலம் ஆகும். இண்டோல்,தியோல் சேர்மங்கள்,கரிமமில்லா போன்ற வேதிப் பொருட்கள் தான் மலத்தின் நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது.மாணுடர்களின் உடலியங்கியலில் மேற்கூறிய ஒரு கழிவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது மட்டும் எவ்வளவு வஞ்சகமாய் திணிக்கிறது இந்திய சாதியச் சமூகம்.! இண்டோல்,தியோல் சேர்மங்கள்,கரிமமில்லா போன்ற வேதிப் பொருட்களால் மலம் நாறுவதைப் போல அதை விட கோடி மடங்கு சாதியத்தினால் இத்தேசம் நாறிக்கொண்டிருக்கிறது.இந்த நாற்றத்தின் மீது அவர்கள் ஒரே தேசம்,ஒரே மொழி…..தூய்மை இந்தியா….,டிஜிட்டல் இந்தியா,ஜி.எஸ்.டி இந்தியா போன்ற வாசகங்களை வாசனை திரவியங்களாக்கி தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் நாற்றம் வீசிக் கொண்டேதான் இருக்கிறது.’’சுதந்திர இந்தியாவில்’’ சனாதனத்தை உயர்த்திப் பிடிப்போர் மாற்றி மாற்றி ஆட்சியாளர்களாய் நீடிக்கும் வரை இந்நாற்றம் வீசிக்கொண்டு தானே இருக்கும்..! பார்ப்பண சமூகத்தில் பிறந்திருந்தாலும் 1986-ல் கோபி செட்டிப் பாளையத்தின் நகராட்சி தலைவராக இருந்து 57 லட்ச ரூபாய் செலவில் உலர் கழிப்பிடங்கள் எல்லாம் நீரடி மலக் கழிப்பிடங்களாக மாற்ற லக்ஷ்மன ஐய்யர் எனும் தனி மனிதரால் முடிந்திருக்கிறது.அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த ‘வல்லரசு இந்தியாவால் முடியாமல் போவதற்கு காரணம் எது ? சனாதன மனப்பான்மை தானே…! அரச தீண்டாமை தானே…?.
அரசை விடுங்கள். நம்மாளும் எப்படி இவ்வளவு பெரிய வண் கொடுமையை கண்டும் காணாமலும் நகர்ந்துக் கொண்டிருக்க முடிகிறது.ரயில் நிலையங்களில் அதன் தண்டவாளத்திற்கு இடையே அப்பியிருக்கும் மலத்தை கூடையில் பெருக்கி வாரும் பெண்களை கண்டும் காணாது எப்படி கடந்து போக முடிகிறது நம்மால்.! நம் வீட்டருகில் நாம் கழித்த மலக்குழிக்குள் அடைப்பு ஏற்பட்டால் அதிலிறங்கி கரும் சாக்கடை உடல் முழுதும் வழிய ஈ மொய்க்க மேலேருகிறார்களே அந்த ஆண்களை கண்டவுடன் நம்மாள் எப்படி மூக்கைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தை வேகமாய் கடக்க முடிகிறது.அவர்கள் பெரும்பாலும் சக்கிலியர்கள் என்பதனால் தானே…! இரண்டு பிராமினர்கள் துப்புரவு வேலையை செய்கிறார்கள் என்று மனம் பதறி செய்தி வெளியிட்ட அந்த ஆங்கில அச்சு ஊடகத்திற்கும் நம் அமைதிக்கும் அர்த்தம் ஒன்று தானே..!
இதுவரையில் எத்தனை எத்தனை மனித உயிர்கள் நம் கழித்த மலத்தின் நெடியை நுகர்ந்து இறந்திருக்கிறார்கள்.! இதுவரையில் எத்தனை எத்தனை பெண்கள் நம் நாறும் மலத்தினால் மன உலச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்..!இன்னும் எத்தனை எத்தனை பேர் என் இசக்கியைப் போல மனம் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்…என்ன செய்ய போகிறோம் நாம்…! மெளனம் நஞ்சை விட மிகக் கொடியது என்பதே என் கருத்து…!
நஞ்சகற்றி மெளனம் களைவோம்…! மாணுடமாய் இணைவோம்..!



...மதிப்பிற்குரிய மங்கை பானு



#சாதியைஒழிப்போம், #கையால்மலம்அள்ளும்இழிவுக்குமுடிவுகட்டுவோம்
#annihilatecaste #endmanualscavengingnow

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016