நலவாரியம் போதாது இடப்பங்கீடே வேண்டும்...!!!!!

நலவாரியம் போதாது
இடப்பங்கீடே எங்களின் அடிப்படை…!
………………………………………………………………………..
உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட இனங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட இனமாக என் திருநர் பாலினம் இருக்கிறது.பல வடிவங்களினாலான தீண்டாமைகளையும் ஒடுக்கு முறைகளையும் மொத்தமாய் சுமந்து திரிபவர்கள் நாங்கள்.குடும்ப தீண்டாமை,சமூக தீண்டாமை,அரச தீண்டாமை என மூன்றும் இணைந்து குழைந்து உருவாக்கப்பட்ட கொடிய ஆயுதத்தினால் தினம் தினம் எங்களின் மாணுட உணர்வுகளும் உணர்ச்சிகளும் சுயமரியாதையும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது.அந்த ஆயுதம் பல வடிவங்களில் தன்னை உருமாற்றி,காலத்திற்கு தகுந்தாற் போல நெகிழ்வு தன்மையைக் கொண்டு,மேலோட்டமாக முற்போக்கானதாக வெளிப்படுத்திக் கொண்டே உள்ளடக்கத்தில் அச்சித்திரவதையை புரிந்து கொண்டே இருக்கிறது.
எங்களுக்காக அமைக்கப்பட்ட பெயரளவிலான நலவாரியம் அப்படிப்பட்டதே……..
Related image
ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுமென்பார்கள்.உண்மைதான் இங்கேயும் அப்படித்தான். திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதி   15 ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது.வரலாற்று வழியில் அப்போதைய தமிழக அரசின் இவ்வறிவிப்பு உள்ளபடியே தமிழக திருநர்களின் மாபெரும் பாதுகாப்பு அரணாக அமைந்தது.எங்களின் பாலின விடுதலையின் அடித்தளமாகவே நாங்கள் அதை கருதினோம்.அத்தினத்தையே திருநங்கையர் தினமாக இன்றுவரையில் ஆத்மார்த்தமாக கடைபிடிக்கிறோம்.ஆனால் அரசின் அவ்வறிவிப்பும் எங்களின் உற்ச்சாகமும் ஏதோ சடங்குத்தனமான ஒன்றாகவே இன்றுவரையில் இருந்து வருவதாக நான் கருதுகிறேன்.ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறியதும் கூட தெரியாமல் நாங்கள் பழைய காட்சிகளையே கடைபிடிக்கும் சடங்குத் தன அப்பாவிகளாக இன்று வரையில் இருந்து வருகிறோம்.
நலவாரியம் என்ற பெயரில் விதவித அறிவுப்புகளும் சலுகைகளும் ஏட்டளவிலேயே மிளிர்கிறது.செயலளவில் என் சமூகம் இருளிலேயே மிதக்கிறது.காரணம் சமூக அடித்தளத்தை மாற்றுவதற்கான கல்வி,வேலை வாய்ப்பில் இடப்பங்கீடு எனும் முழக்கத்தை நிறைவேற்றாது  இந்த நலத் திட்ட அறிவுப்புகளும் சலுகைகளும் வெற்றுக் காகிதமாகவும் அறிவிப்பாகவுமே காற்றில் மிதக்கும். குடும்பம்,வீடு,உறவு இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டையும், வேலையும் கல்வியும் அற்று பிச்சை எடுப்போருக்கு வாக்காளர் அட்டையும் ,தொழில் புரிய எந்த பாதுகாப்பும் இல்லாமல் எங்களுக்கு சொற்பமாக வழங்கப் படுவதாக சொல்லப்படுகிற கடன் தொகைகளும்,மிருகங்களைப் போன்றே எங்களை கருதி எங்களுக்கு புரியப் படுகிற அரசு மருத்துவமனையின்  அறுவை சிகிச்சை. இது போன்ற நலவாரியத்தின் செயல்கள் நோயைப் பற்றியே புரியாமல் நோயாளிக்கு மருந்து கொடுக்கும் ஒரு மருத்துவரின் செயல்போலவே இருக்கிறது.அது மட்டுமல்ல இது ஒரு கொடிய அலட்சியப் போக்கு.இந்த அலட்சியப் போக்கைத் தான் தீண்டாமையின் வடிவமாக நான் கருதுகிறேன்.எங்களின் இடப்பங்கீட்டு உரிமைக்காக நாங்கள் ஓங்கி குரலெழுப்பும் போதெல்லாம்,சட்டமன்றத்திலே அக்கறையுள்ள உறுப்பினர்களால் அது எதிரொளிக்கும் போதெல்லாம் இவர்கள் தூவிய இந்த மெல்லிய சலுகைகளை பெரிதாய் பேசியமர்வார்கள்.அதற்காகவே குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கிற அந்த நலவாரியத்தின் சில சலுகைகள் மூலமாகவோ அந்த நலவாரியத்துக்கு எம் பாலினத்தோர் சிலரை அமர்த்தியும் கொஞ்சம் கொஞ்சம் உயிரூட்டப்படும்.நாங்கள் மற்ற சமூகங்களோடு சமமான சமூகமாய் வாழ்வதற்கான அடிப்படையாய் இருக்கிற கல்வி வேலை வாய்ப்பில் இடப் பங்கீடு எனும் உரிமையை அரசாங்கங்கள் நிறைவேற்றும் படி உச்ச நீதி மன்றமே உரைத்த பிறகும்,நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில்
 திரு. திருச்சி.சிவா.அவர்கள் கொண்டு வந்த மாற்றுப் பாலினத்தோர் உரிமை மசோதா 2016 எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேரிய போதும் இன்னமும் அம்மசோதா தீண்டாமைக்கு ஆட்பட்டிருக்கும் மர்மம் என்ன…!   
சலுகைகளை இரைத்து காலத்தை தள்ள வேண்டாம்..


எங்களுக்கான உரிமையேஎங்களுக்கு வேண்டும்…!நாங்கள் உங்களின் அடிமைகள் அல்ல இத்தேசத்தின் பிரஜைகள் என்பதை மறவாதீர்கள்...!





...மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

  1. தடைகளை தட்டிக்கழிப்பதை விட, தகர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம்...

    ReplyDelete
  2. வாழ்வில் சிலநேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம்.. அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள்.. மனம் தளராதீர்கள்.. அவைதான் நாளை நாம் பெறப்போகும் வெற்றியின் படிக்கட்டுகள்..!!

    ReplyDelete
  3. புது சரித்திரம் படைக்க வாழ்த்துகள்.... தங்களின் பயணம் முயற்சி வெற்றி அடையும்... என்றும் என் ஆதரவு உண்டு சகோதரியே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016