திருநங்கையும் வாடகை வீடும்..
மனிதன் வாழ தேவையான அடிப்படை வசதி உணவு,உடை,உறைவிடம் இவற்றுள் உணவு ,உடை மட்டும் திருநர் சமூகத்திற்கு கிடைக்கிறது ஆனால் உறைவிடம் மட்டும்??????? வேடந்தாங்கள் பறவைகள் போல ஒரு இடத்தில் தங்குவதற்கு குறைந்த நாட்கள் மட்டுமே வாழ இச்சமூகம் எங்களை அனுமதிக்கிறது .மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் ஒவ்வொரு இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து நாடோடிகளாக வாழும் நிலையை இச்சமூகம் எங்களுக்கு பரிசாக அளித்திருக்கிறது.
பிச்சையெடுத்தாலும்,பாலியல் தொழில் செய்தாலும் எங்களின் வரிப்பணம் மட்டும் வாங்கும் இந்த இந்திய அரசை நாங்கள் மனதார வாழ்த்துகிறோம்.பறவைகளுக்கு கூட கண்ணயர்ந்து அசதி மறக்க தலை சாய்க்க ஒரு கூடுண்டு ஆனால் என்னை போன்ற திருநர்களுக்கு இந்த வீட்டை எப்பொழுது வீட்டு முதலாளி காலி செய்ய சொல்லிவிடுவாரோ????? என்ற பயத்தில் தூக்கம் தொலைந்து வாழ்கிறோம்."எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், இருப்பதற்கு இடம் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
என்று கூறிய அண்ணல் அம்பேத்கரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.நாங்கள் கேட்பது பிச்சையல்ல வாழ்வதற்கு இடம் கொடுங்கள் என்றுதான்.......
...மதிப்பிற்குரிய மங்கை பானு
உறைவிடம் என்பது இந்திய அரசியல் சட்ட சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமை. அதனால்தான் பல காலகட்டங்களில் இலவச வீடு, இலவச பட்டா வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. இலவச வீடு, இலவச பட்டா வாங்கியவர்களில் பலர், கிடைத்ததை விற்றுவிட்டு மீண்டும் வரிசையில் நிற்கிறார்கள். அடியேனும் வீடின்றி வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருகிறேன். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன். என்ன சாதி, என்ன மதம், என்ன வேலை என கேட்டுவிட்டுதான் வீடு தரலாமா என்று ஆலோசிப்பார்கள். அப்படியென்றால் திருநங்கைகளின் நிலை ஆலோசித்துப் பார்ப்பதற்கே சிக்கல்தான். திருநங்கைகளைப் பொறுத்தளவில் உறைவிடம் ஒரு பெரிய பிரச்சனைதான். அவர்களை பார்க்கின்ற பார்வையும், அவர்களை அரவணைக்கின்ற பார்வையும் மாறாததே அதற்குக் காரணம். திருநங்கைகளுக்கும், ஏனைய ஆண், பெண்களுக்குமான உறவு இன்றும் இணக்கம் ஆகவில்லை. ஒரு தூரத்துப் பார்வையில்தான் பயணிக்கிறது. அதனால் குடியிருப்பு என்பது கேள்விக்குறி ஆகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ 500/- கொடுத்து வாடகைக்கு குடியிருக்கும் திருநங்கைகள் இருக்கிறார்கள். அதாவது, உள்வாடகை. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் திருநங்கைகளுக்கு உறைவிடங்கள் அமைக்க அரசு முன்வர வேண்டும். அதனால் அவர்களுடைய செலவுகளும் மிச்சமாகும். வாழ்வும் அர்த்தமாகும்.
ReplyDelete