உங்களில் பாவம் செய்யாதோரே நாட்டை ஆளும் அவைகளில் அமரக் கடவது.
உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவது. யோவான் 8;7 இந்த நீதிக் குரல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரோம் சாம்ராஜ்யத்தில் நிலவிய அநீதியை எதிர்த்து எழுந்தது.!அன்று எழுந்த இக்குரலுக்கு பதில் கூற இயலாததாகவே இன்று வரையிலும் மக்களை ஆளும் அரசுகள் இயங்குகின்றன.உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒடுக்கப்பட்ட பாலினத்தவர்களான பெண்கள்,திருநர் விஷயத்தில் இத்தேசம் சரியான புரிதலுக்கு வராமல் இயலாமையும் கொரூரத்தையும் வெளிப்படுத்தும் விதமாகவே இயங்குகிறது. உலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் நம் தேசத்தில் அதிகமாக நிகழ்வதாகவும் நம் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை எத்தனையோ புள்ளி விவரங்கள்,நிகழ்வுகள் எடுத்துரைத்த போதிலும்..... கோடிக்கணக்கான பெண்களின் அறிவும் கரங்களும் அடுப்படியிலேயே உழல்வது தெளிவாக தெரிந்த போதிலும்.... குடும்பத்தால் விரட்டப்பட்டு,சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு கல்வி கற்க முடியாமல்,உற்பத்தியில் ஈடுபடமுடியாமல் கடை வீதிகளில் பிச்சை எடுக்கும் திருநங்கைகளின் அவல வாழ்வியல் கண்ண...