உங்களில் பாவம் செய்யாதோரே நாட்டை ஆளும் அவைகளில் அமரக் கடவது.

உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவது. யோவான் 8;7

இந்த நீதிக் குரல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரோம் சாம்ராஜ்யத்தில் நிலவிய
அநீதியை எதிர்த்து எழுந்தது.!அன்று எழுந்த இக்குரலுக்கு பதில் கூற இயலாததாகவே இன்று வரையிலும்
மக்களை ஆளும் அரசுகள் இயங்குகின்றன.உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும்
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஒடுக்கப்பட்ட பாலினத்தவர்களான பெண்கள்,திருநர் விஷயத்தில் இத்தேசம் சரியான புரிதலுக்கு வராமல்
இயலாமையும் கொரூரத்தையும் வெளிப்படுத்தும் விதமாகவே இயங்குகிறது.

உலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் நம் தேசத்தில் அதிகமாக நிகழ்வதாகவும் நம் பெண்கள் அதிகம்
பாதிக்கப் படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை எத்தனையோ புள்ளி விவரங்கள்,நிகழ்வுகள்
எடுத்துரைத்த போதிலும்.....
கோடிக்கணக்கான பெண்களின் அறிவும் கரங்களும் அடுப்படியிலேயே உழல்வது தெளிவாக தெரிந்த போதிலும்....
குடும்பத்தால் விரட்டப்பட்டு,சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு கல்வி கற்க முடியாமல்,உற்பத்தியில் ஈடுபடமுடியாமல்
கடை வீதிகளில் பிச்சை எடுக்கும் திருநங்கைகளின் அவல வாழ்வியல் கண்ணெதிரே தெரிகின்ற போதிலும்....
இத்தேசத்தினால் ஏன் இவர்களுக்கான ஒருக்கட்ட விடுதலையைக் கூட கொடுக்க முடியவில்லை...?
 http://www.btvin.com/media/images/news/98b5b08d9f07ca8d4f07261100644001.jpg
இந்த பாலின பாகுபாட்டைக் களைந்தெரிய சட்டமியற்றும் துறைகளான நாடாளுமன்றம்,சட்டமன்றங்களில் “இடப்பங்கீடு
வேண்டும் என்று பெண்கள் எழுப்பிய முழக்கத்தையும்
”நாங்கள் கல்வி கற்க வேண்டும்!”நாங்கள் உழைத்து வாழ வேண்டும்”! பிச்சை எடுத்தலில் இருந்து எங்களை மீட்டெடுத்து
கல்வி வேலை வாய்ப்பில் இடப்பங்கீடு அளியுங்கள்! என்று திருநங்கைகள்-திருநம்பிகள் எழுப்பிய முழக்கத்தையும் இத்தேசம்
எப்படி அனுகியது என்பதைப் பார்த்தாலே இத்தேசம் பாவத்தின் முழு உருவாய் திகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நாடாளுமன்றம்,சட்டமன்றங்கள் ஆகிய சட்டமியற்றும் துறைகளில் எங்களுக்கு இடப்பங்கீடு அளியுங்கள் என்ற
இந்தியப் பெண்களின் முழக்கம்,ஆணாதிக்கச் சமூகத்தின் திரையைக் கிழித்து 1990 களுக்குப் பிறகு எழுந்தது.அப்போதுதான்
பஞ்சாயத் ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்தது.உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதச் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது.
சட்டமியற்றும் துறைகளில் இடப்பங்கீடு மசோதாவோ அதற்குப் பிறகுதான் 1996 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்
மொழியப்பட்டது.
தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் 81 வது அரசியல் சாசனத்தின் கீழ் இம்மசோதாவை அன்றைய
சட்ட அமைச்சர் ராம்காந்த் கால்ப் என்பவர் முன் மொழிந்தார்.ராஷ்ட்ரீய ஜனதாதளம்,சமாஜ் வாடி ஆகியக் கட்சிகள் பிற்ப்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் உள் பங்கீடு தர வேண்டும் என அமளி செய்ததால் அம்மசோதா நாடாளுமன்ற உறுப்பினர் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
அக்குழுவின் அறிக்கை அதே ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி மக்களவையில் முன்மொழியப்பட்டு மீண்டும் அதே உள்பங்கீடு
கோரிக்கையால் ஒத்திவைக்கப் பட்டது.
பிறகு 22.11.1999 வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜெத் மலானி மசோதாவை முன் மொழிந்தபோது மீண்டும் அதேக் கட்ட்சிகள் அதே கோரிக்கையை முன் வைத்து சட்ட அமைச்சர் கையிலிருந்த மசோதாவின் நகலைக் கிழித்தெரிந்தனர்.
அதன் பின் 2002,2003 ல் இரண்டு முறை முன் மொழியப்பட்டாலும் நிறைவேற்றிட இயலவில்லை.
2005 ல் இதற்கான அனைத்துக் கட்சி கலந்துரையாடலில் உடன் பாடு ஏற்படவில்லை.

அதன் பின் 2016 வருடமான இன்றுவரையிலும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் விஷயத்தில் இத்தேசம் ஒரு கள்ள மெளனத்தையே கடைபிடித்து வருகிறது.பெண்களுக்கு 33 சதவிகிதம் வழங்கியப் பின்னர் அதில் உள்பங்கீடு கேட்பதுத்தானே ஞாயம்..(நான் உள் பங்கீட்டுக்கு எதிரியல்ல ஆனால் அதைக் கோரும் நேரம் இதுவுமல்ல).
இந்நிகழ்வுகளைப் பார்க்கும் போது பார்ப்பண சமூகத்தின் பெண் தோழி கூறிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வருகிறது.”மாதம் மூன்று நாள் நாங்களும் தீண்டத்தகாதவர்களே”என்றால் அவள்.

பெண்களுக்கே அதிகாரமளித்தளில் ஒரு உடன்பாட்டிற்கு வராத இத்தேசம்,ஒடுக்கப்பட்ட பாலினத்திலும் ஒதுக்கப்பட்ட பாலினமாக இருக்கும் திருநங்கை-திருநம்பியருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இடப் பங்கீடு தர உடனே இசைந்திடுமா என்ன?
http://acdn.newshunt.com/fetchdata13/images/e7/b1/5f/800x480_e7b15fe71bdd415de4d10f30da9288fc.jpg
  அதையும் சுருக்கமாகப் பார்ப்போம்..!
“பிச்சையும் பாலியல் தொழிலும் எங்களுக்கு விதிக்கப்பட்ட விதியல்ல! நாங்கள் சுயத்தோடும் கவுரவத்தோடும் கல்வி,வேலை வாய்ப்பில் இடப்பங்கீடு அளிப்பதே ஜனநாயகத்தின் கடமை!”என்று முழக்கமிட்டு, நான் உட்பட 5 திருநங்கையர் தமிழக சட்டமன்றத்தை அதன் கூட்டத்தொடர் நடக்கும் வேலையில் 2013 ஏப்ரலில் முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டோம்.அதே காலகட்டத்தில் எங்கள் திருநர் சமூகம் இதே கோரிக்கையை ஏந்தி இந்தியா முழுவதும் வீதிக்கு வந்தது.உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.2014 ஏப்ரல் 15 ஆம் நாள் கல்வி,வேலைவாய்ப்பில் எங்களுக்கு இடப்பங்கீடு வழங்க சட்டமியற்றவேண்டும் என்று உச்சநீதி மன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவை பிறப்பித்தது.அதன் பிறகு 2015 அதே ஏப்ரலில் நாடாளுமன்ற மாநிலங்களவையில்  திரு.திருச்சி சிவா அவர்களால் தனிநபர் மசோதாவாக,எங்களுக்கான இடப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உள்ளடக்கிய ’திருநங்கையர்,திருநம்பியர் பாதுகாப்பு மசோதா’கொண்டுவரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் அணைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.(அ.தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பின் போது வாக்களிக்காமல் வெளியேறினார்கள்.)அதன் பிறகு சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறைஅமைச்சகம் அந்த மசோதாவின் முக்கிய அம்சங்களை சிதைத்து வேறு ஒரு மசோதாவை உறுவாக்கி இணையத்தில் திடீரென கருத்துக் கேட்பு நடத்தியது.அதன் பிறகும் மக்களவையில் எங்கள் மசோதா தாக்கள் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.இது சம்மந்தமாக 2016 ஜனவரி 03 ல் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த சமூக அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு.தவார் காண்ட் கெலாட் அவர்கள் “உச்சநீதிமன்றமே இயற்றிட உத்தரவிட்ட திருநங்கையர்-திருநம்பியர் பாதுகாப்பு மசோதா விவாதத்திற்கு மக்களவையில் காத்திருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் கட்சி நேஷ்னல் ஹெரால் பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்குவதாகவும்” பதிலுரைத்தார்.ஆனால் அதே நேரத்தில் பல்வேறு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறியும் இருக்கிறது.இத்தகைய அலட்சியம் என்பதை எங்கள் மீது இந்த பெரும்பாண்மை ஆட்சியாளர்கள் கடைபிடிக்கப் படும் தீண்டாமையாகவே நான் கருதுகிறேன்.!


இத்தேசம் தன் சுயத்தை வந்தடைந்து 69 ஆண்டுகளாகியும் பெண்களும் நாங்களும் இடப்பங்கீட்டை நுகரவே முடியாத போது இத்தேசத்திற்கு தன்னை ஜனநாயகம் என வரையறுத்துக்கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது,.?
ஒடுக்கப்பட்ட பாலினத்தை அடுப்படி விலங்குகளாக,வாழ்தலுக்காக தசையை,உணர்வை விற்க்கும் விற்ப்பனையாளர்களாக உழலவிட்டு பெரும் பாவத்தை சுமப்போரே.....உங்களில் பாவம் செய்யாதவர் எங்களின் வாக்குகளை வாங்கக் கடவது.உங்களில் பாவம் செய்யாதவர் எங்களின் வரிப்பணத்தை வாங்கக் கடவது.உங்களில் பாவம் செய்யாதோரே நாட்டை ஆளும் அவைகளில் அமரக் கடவது.



...மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

Popular posts from this blog

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

போர் பறவைகள்

உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…!Wishes to all women of the world..!