ஜி.எஸ்.டி
GST
மக்களை மேலும் ஒரு அபாய கட்டத்தில் தள்ளிவிடுவதற்காக மீண்டுமொரு இரவு பானி பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள இளவேணிற் காலத்தின் அவ்விரவில் நாடாளுமன்ற மையப் பகுதியில் அவர்கள் குழுமியிருந்த அக்கனம் என்னுள் எத்தனையோ கருத்துருக்களும் வரலாற்ருருக்களும் முட்டி மோதியவண்ணம் இருந்தது.இது போன்ற அவர்களின் இரவு பானி பொருளாதார நடவடிக்கைகள் எத்துருவத்தில் யார் யார் பிடியில் நம்மை நம்மை தூக்கி வீசப் போகிறதோ என்கிற பேரய்யம் எழும்பியது.!அதே நேரம் 1947 ஆகஸ்ட் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட அந் நள்ளிரவிலிருந்து இன்றுவரையில் தொடர்ந்து வருகிற அவர்கள் நம்மவர்களா? அவர்களுடையவர்களா..?என்ற விவாதப் பொருளுக்கு என்னளவில் முடிவு கண்டிட துணிந்தேன்.அம்முடிவை துள்ளியத்துடன் பெற்றிட என்னுள் பதிந்திருக்கிற பல வரலாற்று விவரத் தொகுப்புகளை தூசித் தட்டி எழச்செய்தேன்.அதன் பின்பு மக்களின் அரசை எதிர்த்த ஆக்ரோஷங்களும் அவர்கள் மீதான அடக்கு முறைக் காட்சிகளும் அலையலையாய் எழுந்தன.
பசுமைப் புரட்சி, நிலமற்ற விவசாயிகளின் எழுச்சி,அவசரநிலை பிரகடனம்,போபால், உலக வர்த்தக கழகத்தில் கையெழுத்து,பேரளவிலிருந்து பெருமளவு அந்நிய மூலதன சார்பு,மசூதி இடிப்பு,ரயில் எரிப்பு,குரூரமாய் சிறுபான்மையோர் உயிர் பறிப்பு,நந்திகிராம்,நொய்டா,கூடங்குளம்,மெரினா,நெடுவாசல்,மத்திய பிரதேசத்தின் மான்சரில் இப்போது துளைத்த அந்த துப்பாக்கி குண்டுகள், தற்போதைய கதிராமங்களம் வரை அனைத்திலும் துள்ளியமாய் இழையோடுகிறது அந்நிய மூலதனத்தின் ஆட்சி ரேகை.
இந்த ரேகையின் திசைவழி வளர்ச்சிக்கானது அல்ல. கோடானகோடி மக்களை வறுமையில் தள்ளுவதற்கானது.அவர்கள் நமக்கானவர்கள் அல்ல அவர்கள் அவர்களுக்கானவர்கள் என்று பல ஆண்டுகளாய் புற வெளியில் மேற்கொள்ளும் விவாதப் பொருளுக்கு என்னுள்ளே ஒரு முடிவிற்கு வந்தாயிற்று.
என்னுடைய இந்த முடிவு என் நண்பர்கள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் என்று என்னால் உணர முடிகிறது.அவர்களுக்கு நான் உரைப்பது என்னுடைய இந்த முடிவு சுதந்திரத்திற்காக சிந்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் ரத்தத்தின் அடர்த்தியிலிருந்து,நெரிக்கப்பட்ட ஜனநாயக குரல் வளைகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளிலிருந்து,அரச தீண்டாமையால் பரீசிலிக்கப்படாமலிருக்கும் ஒடுக்கப்பட்டதிலும் ஒடுக்கப்பட்டவர்களான என் பாலினத்தோரின் கோரிக்கையிலிருந்து எழுந்தது.
நவம்பர்-8,ஜூந்-30 போன்ற அவர்களின் இரவுபானி நடவடிக்கைகள் என்னைப்போன்ற மக்களையும் இம்முடிவை நோக்கித்தான் தள்ளிக்கொண்டிருக்கிறது.மக்கள் வேகமாய் இம்முடிவை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள் என்று புறவய எதார்த்தத்திலிருந்து என்னால் உணர முடிகிறது.
அவர்கள் கார்ப்ரேட்டுகளுக்கான உலகை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்ரேட்டின் அச்சில் ஒட்டுமொத்த மக்களையும் வார்த்தெடுக்க முயற்சிக்கிறார்கள்.அவர்களுக்காகத்தான் வங்கியின் வாசலுக்கு முன்னால் நம்மை சுருண்டு விழச்செய்து நம் உயிரை,உழைப்பை,நேரத்தை பருகி ருசித்தார்கள். அவர்களுக்காகத்தான் சாமானியர் பழச்சாறு கூட நுகற முடியாது ஜி.எஸ்.டி.விதித்து விலை உயர்த்துகிறார்கள்.
நவம்பர்-8 போலவே ஜூன் 30 ம் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் உழைப்போரையும்,மாற்றுத்திறனாளிகளையும் மாற்றுப் பாலினத்தோரையும் கடுமையாய் பாதிக்கும்..! கார்ப்ரேட்டுகள் பலமாய் தடம் பதிக்க வழிவகுக்கும்,! பிச்சையெடுத்தும் பாலியல் தொழில் புரிந்தும் வாழ்வாதாரத்தை நுகரும் எம் பாலின சமூகத்தின் தலையிலும் ஜி.ஸ்.டி.
பெரும் சுமையாய் முடியும் ஏனெனில் சிறு இருப்பை வைத்துக் கொண்டு வாழ்வாதார பொருட்களை நுகரும் பலகீனமான சமூகத்தை சார்ந்தவர்கள் நாங்கள். ஜி.எஸ்.டி.யை சுமந்த பொருட்களை நுகர்வதற்கு எங்கள் எஜமானர்களாகிய பிச்சையிடுபவர்களிடம் பிச்சையை உயர்த்தியிடும்படி எங்களால் போராடமுடியாது.பெரும்பாலான உழைப்போருக்கு வாய்த்த கூலியுயர்வு போராட்டம் கூட வாய்க்கப்படாத நவயுக அடிமைகள் நாங்கள்.எங்களைப் பொருத்தவரையில் ஜி.எஸ்.டி யின் சுமை எங்கள் சிறு நுகர்வின் பரப்பை குறுக்கும் ! ஏழ்மை சிறையை மேலும் பெறுக்கும்..!
இறுதியாக……….என் கோபத்தை என் முன்னோர் உரைத்த வார்த்தை வாளை கையிலெடுத்து இவ்வரசுக்கு எதிராய் வீசுகிறேன்…!
“கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை! -கட்டபொம்மு
#GST
#TransLivessMatter
#WtoKillsPeople
Comments
Post a Comment