திரு.ராமதாஸ் அத்வாலே அவர்களுக்கு 

உங்களின் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும் ஒருத்தி.ஏனெனில் அண்ணல் அம்பேத்கர் தோற்றுவித்த அரசியல் கட்சியின் தலைவராயிற்றே நீங்கள்…!

அம்பேத்கரின் கருத்துக்கு நேரெதிராக இயங்கும் தற்போதைய பி.ஜே.பி.அரசின் அமைச்சரவையில் தாங்கள் அங்கம் வகிப்பது எனக்கு கசப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் உங்களின் சில பேச்சுக்களையும்..கண்டனங்களையும் நான் மனமாற வரவேற்றிருக்கிறேன்,,,வாழ்த்தியிருக்கிறேன்..! ’’

அனைத்து விளையாட்டுகளிலும் இடவொதுக்கீடு வேண்டும்’’ என்று நீங்கள் கோரிய போதும் ’’சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில், கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ரூ.2½ லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்க பரிசீலித்து வருகிறோம்.’’என்ற தங்களின் அந்த பரிசீலனை அறிவிப்பும்
 Related image
தமிழ்நாடு, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கவுரவக்கொலை சம்பவங்கள் கவலை தருகிறது. இதனை தடுக்க வேண்டும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து இந்த கொடூர சம்பவங்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தங்களின் அந்த சமூக அக்கறையும்..... உள்ளபடியே நான் கரகோஷமிட்டு ரசித்த தருணங்கள் அது.   அதனால் தான் தாங்கள் இணையமைச்சராக இருக்கும் துறையினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் ’’மாற்றுப் பாலினத்தோர் பாதுகாப்பு மசோதா 2016’’ல் எங்களுக்கான இடப்பங்கீட்டு உரிமை நிச்சயம் இருக்கும் என முழுமையாய் நம்பினேன்.ஆனால் நான் எண்ணியதற்கு மாறாக எதார்த்தம் எதிர்ப்புறத்தில் பயணிப்பதை கண்டு மனம் வெதும்பினேன்


தற்போது திருநங்கைகளைப் பற்றிய தங்களின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் அமைந்திருக்கிறது..! இந்திய குடியரசு கட்சியின் தலைவர், ராஜ்யசபா எம்.பி., மாநிலங்களுக்கான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வகிக்கும் நீங்கள், ஆந்திரத்தில் உள்ள கிராமப்புற மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய நிறுவனத்தில் கடந்த ஜூலை 31ம் தேதி திருநங்கைகள் பற்றிய தேசிய ஆய்வுக்கூட்டத்தில்,திருநங்கைகள் குறித்து உங்களுடைய குழம்பிய ஒரு மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நாங்கள் ஆணும் அல்ல பெண்ணுமல்ல ஆனால் மனிதர்கள் என்றும் கூறிவிட்டு,’’அப்படியிருக்கும்போது பெண்களுக்கான புடவையை நீங்கள் ஏன் அணியவேண்டும் ? பேண்ட் மற்றும் சட்டையை நீங்கள் அணியலாம், இது என் தனிப்பட்ட கருத்து அதே நேரத்தில் நீங்கள் விரும்பிய உடையை அணிந்து கொள்ளலாம்’’என்றும் குறியுள்ளீர்கள்.  மேலும் நீங்கள் ’’இந்தியாவில் 6 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். அவர்கள் கல்விக்கூடம் மற்றும் வேலைக்குச் செல்லும்போது துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். எனவே திருநங்கைகளுக்கான மசோதாவை விரைவில் இந்திய அரசு நிறைவேற்றவேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறீர்கள்.

முதற்கண் எங்களை நீங்கள் மனிதர்களாக ஏற்றுக் கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி…!   இந்த 21 ஆம் நூற்றாண்டிலாவது உங்களால் நாங்கள் மனிதர்கள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிய ஆச்சிரியத்தை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது.! அப்படியானால் இந்த இருபது நூற்றாண்டுகளாக நாங்கள் என்னவாக இருந்தோம் என்று எண்ணும் போது என்னுள் இருக்கும் பெரும் கசப்புணர்ச்சியை சிறு புன்னகையாய் உதிர்க்க வேண்டியதிருக்கிறது. நீங்கள் உதிர்த்திருக்கும் இந்த வார்த்தைகளைப் போலத்தான்…. நாடாளுமன்றத்தின் மக்களவையில்,நீங்கள் அங்கம் வகிக்கும் ஆட்சியால் தாக்கல் செய்யப்பட இருக்கும் ‘’மாற்றுப் பாலினத்தோர் பாதுகாப்பு மசோதா 2016’’ ம் எங்களின் இடப்பங்கீட்டு உரிமையை மறுத்து நாங்கள் மனிதர்கள் என்று மட்டுமே அங்கீகரித்து,எங்களுக்கான சிற்சில சலுகைகளை மட்டுமே வழங்குவதாக  இருக்கிறது. இம்மசோதா கடந்து வந்த பாதை தாங்கள் அறியாதது அல்ல.


பிச்சையெடுக்கும் எங்களின் கரங்களும் குரல்களும்,வாழ்வதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் எம்பாலினத்தோரின் உடல்களும் உணர்ச்சிகளும் வீதியில் எங்களின் விடுதலைக்காக முழங்கிய பின் தான்,…  எங்களின் விடுதலை முழக்கங்கள் உங்களின் அதிகாரக் கூடாரங்களுக்கு முன்பாக ஒலித்த போது தான்…  லத்தி அடிகளையும் சித்ரவதைகளையும் நாங்கள் பரிசில்களாக பெற்ற போது தான்…..  எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த திருச்சி சிவா அவர்களால் இடப்பங்கீடு உள்ளிட்ட முக்கியமான அம்சங்களை உள்ளடக்கி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தனி நபர் மசோதாவாக எக்கட்சியின் எதிர்ப்புமின்றி ஒரு மனதாக நிறைவேறியது. ஆனால் அம்மசோதாவின் முக்கிய அம்சமும்,எங்களின் உரிமையுமான இடப்பங்கீட்டு உரிமையை நீங்கள் இணையமைச்சராக அங்கம் வகிக்கும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நீக்கிவிட்டு,சலுகைகளை மட்டுமே வழங்குகிற,எங்களை மனிதர்களாக மட்டுமே அங்கீகரிக்கிற, ஒரு வெற்று மசோதாவை தாக்கல் செய்ய இருக்கிறீர்கள்.குழம்பிய நிலையில் கிடக்கும் அம்மசோதாவில் உள்ளவற்றைத் தான் நீங்கள் வார்த்தைகளால் வரைந்திருக்கிறீர்கள். அந்நிகழ்விலே நீங்கள் வரைந்த அக்கருத்தை மேலோட்டமாக ஒருவர் அனுகும் போது அது பயனுள்ள பேச்சாகவே ஒருவருக்குத் தெரியக் கூடும்.ஆனால் என்னைப் பொருத்தவரையில் உங்களின் இப்பேச்சு ஒரு அடிமையின் மீது எப்போழுதாவது ஆண்டை வெளிப்படுத்தும் சிறு பரிவைப் போன்றதாகவே தோன்றுகிறது.



நாங்கள் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல.நாங்கள் மனிதர்கள்’’ என்று கூறும் உங்களுக்கு ’’நாங்கள் திருநங்கைகள்.! ஆண்களைப் போன்று பெண்களைப் போன்று நாங்கள் ஒரு தனிப் பாலினம் என்ற கருத்தை வந்தடைவதற்கு எது தடையாக இருக்கிறது ?   நாங்கள் என்ன உடை வேண்டுமானாலும் அணியலாம் என்று சொல்லும் நீங்கள், நாங்கள் புடவை அணியக் கூடாது என்று எங்களுக்கு எதிரான உங்களின் தனிப்பட்ட கருத்தை ஒட்டுமொத்த கருத்தின் கருவாக்க முயற்சிப்பதன் நோக்கம் என்ன..?


எங்களின் பாலின இயங்கியலை எத்தனையோ முறை அரசிடம் குறிப்பாக உங்கள் துறையிடம் நாங்கள் விளக்கியாயிற்று.அப்படியிருந்தும் உங்களின் சிந்தனையில் படிந்திருக்கும் பழைய கருத்தாக்கத்தை ஏன் மாற்றிக் கொள்ள மறுக்கிறீர்கள்…? நங்கள் பெரும் வாக்கு வங்கியற்ற சமூகம் என்பதாலா…? அல்லது கேட்பாரற்ற சமூகம் என்பதனாலா…..? என்னுடைய தலைசிறந்த ஆசான்களில் ஒருவரான அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தோற்றுவித்த இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருக்கு இக்கருத்து எப்படி உகந்ததாக இருக்க முடியும்.! ’’காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?’’என்ற கருத்துச் செறிவு மிக்க அப்புத்தகத்திற்கே மேற்கோளாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் திரு.துசிடிடெஸ் அவர்களின் கோபக் கோவையான வார்த்தைகளை மேற்கோளாக வைத்திருப்பார். அண்ணல் அம்பேத்கர் எடுத்தாண்ட அதே மேற்கோளை தங்களுக்கு எடுத்துரைக்கிறேன்…. ‘’எங்களுடைய எஜமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்ளுக்கு உகந்ததாக இருக்கக் கூடும்.ஆனால் உங்களுடைய அடிமைகளாக இருப்பது எங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும் "-துசிடிடெஸ்

Comments

Popular posts from this blog

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

Euthanize Us!

போர் பறவைகள்