தயைகூர்ந்து எங்களின் மீது உங்களின் சுதந்திர தின வாழ்த்தின் வன்மத்தை தெளிக்காதிருப்பீர்களாக..!

தயைகூர்ந்து எங்களின் மீது
உங்களின் சுதந்திர தின வாழ்த்தின் 
வன்மத்தை தெளிக்காதிருப்பீர்களாக..!
அவ்வார்த்தை ஒரு கொடிய அமிலமாய்
எங்களை சுடுவதை
உங்களால் உணரமுடிகிறதா...?
  http://www.newsread.in/wp-content/uploads/2015/08/15-august-independence-day.jpg
பிச்சையெடுக்கும் எங்கள் கரங்களால்
பதில் வாழ்த்துக்களை சொல்லி
உங்கள் கரங்களோடு
எங்கள் கரத்தை குலுக்க இயலாது..!

சுதந்திர தின வாழ்த்தையுரைக்கும்
உங்கள் குரலுக்கு
பாலியல் தொழிலுக்கு உங்களை
கூவி இசைக்கும்
எங்களின் குரலால்
வாழ்த்திசைக்க இயலாது....!

குடும்ப தீண்டாமை
சமூக தீண்டாமை
அரச தீண்டாமையெனும்
முவ்வாளுமையில் மூழ்கிக் கிடக்கும்
எம் பாலினத்தோரால்
அம்மூவர்ண கொடியை உயர்த்தி
பல்லிலித்திட இயலாது..!

உங்களைப் போன்று இல்லாத எங்களால்....
இத்தேசத்தின் அனைத்து திசைகளிலும்
வாழ்விழந்த எங்களால்....
உங்களின் வாழ்த்தின் வன்மத்தை
உள்வாங்கிட இயலாது...!
ஆம்...!
உங்கள் வாழ்த்தில்
கொடிய வன்மம் ஒளிந்திருக்கிறது..!
எங்களை
பொட்டை
ஒம்போது
உஸ்..
அலி
எனும் அவ்வன்மத்தை விட
எங்களிடம் நீங்கள் கூறும்
சுதந்திர தின வாழ்த்தின் வன்மம்
மிகக் கொடியது..!
ஆகவே நண்பர்களே....
கொடிய அமிலமாம்
உங்களின் சுதந்திர தின
வாழ்த்தின் வன்மத்தை
எங்கள் மீது நீங்கள் தெளிக்காதிருப்பீர்களாக...!

Comments

  1. உங்களின் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறோம்..உங்களின் உரத்த குரலோடு எங்களின் குரலும் முழக்கமிடும்

    ReplyDelete
  2. நாங்கள் இன்னும் விடுதலைப் பெற்றுவிடவில்லை....

    ReplyDelete
  3. இறைவன் துயிலில் இட்ட இறைவியே !!! வாழத்தகுதியற்ற நாட்டில் இருந்து வெளியேறுவதே சுதந்திரம்.... ஆனால் வையம் முழுக்க இதுவே தொடரும் என்றால் என்ன சொல்ல ??? மனிதம் கொண்ட இதயங்களே நீங்கள் வாழும் வீடு... இதோ என் இதயமும் அதில் ஒன்றாக இருக்கட்டும்... என் வீட்டு பெண்ணாக என் சகோதரியாக உங்கள் முன் கரம் சேர்க்கிறேன் வணக்கம் என்ற வரவேற்பில்....

    ReplyDelete
  4. எது வேண்டுமென்றாலும் கூறுங்கள் பரவாயில்லை ஆனால் அதற்காக
    சுதந்திரத்தையே கேவலப்படுத்துவது மிகவும் வருத்தத்துக்குரியது

    அன்புடன்
    பாலு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016