காதலர் தினம்....! Valentines Day..!
காதலர் தினம்.
கொண்டாட்டங்கள் என்பது மனித உறவுகள் கூடி மகிழ்வை சுவைக்கும் ஓர் ஏற்பாடே…!அந்தந்த நிகழ்விற்கு ஏற்ப அதற்கொரு பொருத்தமான இயற்கை,சமூகம்,வாழ்வு,வரலாற்று குறியீடுகளை முன்னிருத்தி கொண்டாட்டங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
வாழ்வும் அதன் வளர்ச்சியும் சூழலும் அதன் பாதுகாப்பும் வரலாறும் அதன் போற்றுதலும் அத்தனைக்கும் இங்கே கொண்டாட்டங்கள் கொட்டிக்கிடக்கும் போது காதலர்களுக்கு மட்டும் ஏன் இல்லை? என காதலர்கள் இத்தேசத்தைப் பார்த்து வினா எழுப்ப, இது அகமன முறை அடிப்படையிலான சாதிய தேசம்.இங்கே புறமனத்தில் காதல் புரிவோர் கொல்லப்படுவர்..! என இத்தேசம் பதிலுரைக்க, அப்படியா…..! என காதலர்கள் அருவெறுப்போடு வியந்து காற்றில் குழைந்து வானில் பறந்து ரோமில் இறங்கி காதலர்களை இணைத்ததனால் இரண்டாம் சீசரால் கொல்லப்பட்ட வேலண்டைனின் இறப்பு நாளான பெப்ருவரி 14 ஐ பெயர்த்தெடுத்து தேசம் வந்து இதுவே நம் நாள்..! காதலர் நாள்…! என எங்கும் தூவினார்கள்.தூவப்பட்ட இடமெங்கும் காதலர்கள் ரோஜாக்களாய் முளைத்தார்கள்.புன்னகையால் சிறகு விரித்தார்கள்.இரு இதயங்களையும் இணைத்து ஒரே துடிப்பில் இயங்கினார்கள். உடல் கூட்டிலிருந்து உயிர்களை இறக்கி ஒன்றாய் இணைத்து காதல் பூஞ்சோலையை நுகர்ந்து மகிழ்ந்தார்கள்.ஆனால் சாதியத்தின் எல்லைக் கோட்டைக் கடக்க முடியாமல் வெட்டுப்பட்டு இறக்கிறார்கள்.விஷமூற்றப்பட்டு எரிக்கப்படுகிறார்கள்.காதலர்களின் தலைகளும் உடல்களும் தனித்தனியே தண்டவாளமெங்கும் சிதறிக்கிடக்கிறது.இரண்டாம் சீசரை எதிர்த்து இயங்கிய வேலண்டைனுடைய போராட்ட அழகியல் சாதிய சுவரை கடக்க முடியாமலும் உடைக்க முடியாமலும் கிடக்கிறதே எதனால்…?
காதலர்களே…..
இந்த மண்ணில் மறைக்கப்பட்ட காதலர்களைப் பற்றி அவர்களின் மகத்தான வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா…?
இப்போதெல்லாம் ஏன் தெரியுமா காதலர்கள் தோற்கிறார்கள்…!
கிருஸ்தவ மதகுரு வேலண்டைனை தெரிந்த உங்களுக்கு சாதியெதிர்ப்புப் போராளி புத்தரைத் தெரியாததனால் தோற்க்கிறீர்கள்...! கேரளத்தைச் சார்ந்த துறவி சாதியெதிர்ப்பாளர் நாராயண குருவை தெரியாததனால் தோற்கிறீர்கள் !இங்கே சாதியை எதிர்த்து இயங்கிய எத்தனையோ அழகிய காதலுருக்களின் வாழ்வியங்கியல் வாசிக்கப்படாமல் கல்லறையிலேயே புதைக்கப்பட்டிருப்பதனால் நீங்கள் தோற்க்கிறீர்கள்…!
இங்கே….
காதலர்களின் ரட்சகர்களாக ஜென்னியும் மார்க்சும் ,சேகுவேராவும் அவருக்காக காத்திருப்பதாக உறுதியளித்த அவரின் காதலி சிசினாவும் அழைக்கப்படுகிறார்கள்.! ஆனால் இந்த மண்ணில் இந்த மக்களுக்காக அவர்களின் சுதந்திரத்திர்காக இவர்களின் வாழ்வின் ஒவ்வோர் அங்கத்தையும் காதலையும் கூட அழுத்திக்கொண்டிருக்கும் சாதியத்தை எதிர்த்து இணையாய் இயங்கிய எத்தனையோ காதலர்கள் வாசிக்கப்படாமல் கல்லறையில் புதையுண்டே கிடக்கிறார்கள்..!காரணம் அவர்கள் தீவிர சாதிய எதிர்ப்பாளர்கள்.தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து பிறந்தவர்கள்..!
தாம் ஈன்றெடுத்தப் பிள்ளை மடிந்தபோதும் மக்களுக்காக அண்ணல் அம்பேத்கரின் படிப்பு தொடரவேண்டும் அடிமைப்பட்ட சமூகம் எழுந்து வீரு நடையிட வேண்டும் என்று நினைத்தாளே அன்னை ரமாபாய் அந்த உணர்வின் வேர் எங்கும் காதல் தானே பறவியிருக்கிறது.பின் ஏன் இவர்கள் காதலர்களாக கருதப்படவில்லை.சாதியத்தைத் தவிர வேறு ஒரு காரணம் இருக்க முடியுமா…? அண்ணல் அம்பேத்கர் ரமாபாயினுடையக் காதல் மார்க்ஸ் ஜென்னியின் காதலைவிட எந்த வகையில் குறைந்தது..? காரணம் கூற இயலுமோ உங்களால்..?
பெண்ணடிமைத்தனத்தையும் சாதிய ஆதிக்கத்தையும் எதிர்த்து பெண் கல்விக்காகவும் சமத்துவசமூகத்தை படைப்பதற்காகவும் சாணிக் கரைசல் தன் மீது ஊற்றபட்ட போதும் சலிக்காமல் இயங்கினாளே அன்னை சாவித்ரிபாய்பூலே அவளோடு என்றும் இணைந்தே இயங்கினாரே ஜோதிராவ் பூலே அந்த இயங்கியலின் ஒவ்வொரு அணுவிலும் காதல் ஒளி வீசிக்கொண்டே இருக்கிறதே அவ்வொளியைக் காணாமல் உங்கள் கண்களின் கருவிழியை முழுதாய் அப்பிக் கொண்டிருப்பது எது.? சாதிய மலம் தானே… அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் சாதியை எதிர்த்து தீவிரமாய் இயங்கினார்கள் என்பதற்காகத்தானே அவர்கள் நூற்றாண்டு புறக்கணிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள்.!
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கரோடு இணைந்து களப்பணியாற்றிய தாத்தா ரெட்டைமலை சீனிவாசனுக்குப் பின்னால் ரெங்கனாயகியம்மாள் என்றொரு காதல் உயிரோவியம் வாழ்ந்திருக்கிறதே அக்காதல் உலகின் பார்வைக்கு படாமல் போனதே எதனால் ? தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் ஒவ்வொரு அசைவிலும் ரெங்கனாயகியம்மாளின் இசைவில்லாமல் இருந்திருக்குமா..? அந்த இசைவின் அடிப்படை எது ? காதல் தானே..! எதனால் இவர்களின் இணைவின் இயக்கம் இரட்டடிப்பு செய்யப்படுகிறது.அவர்களின் சமூகம் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால்தானே…!
தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய அருவாளால் வெட்டுப்பட்டு மடிவதை எதிர்த்து மாவீரனாய் வெகுண்டெழுந்து "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்றொரு இயக்கத்தைத் தோற்றிவித்து எங்கெங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் விசும்பல் கேட்கிறதோ எங்கெங்கெல்லாம் சாதிவெறி கொக்கரிக்கிறதோ அங்கெங்கெல்லாம் சமத்துவ சிந்தனையை சுமந்து சென்று வீரத்தை விதைத்து வந்த மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களைத்தான் நமக்குத் தெரியும்.ஆனால் அந்த வீரத்தின் மனதில் அழகிய காதல் மலராய் வாசம் வீசிக்கொண்டிருந்த அமிர்தம் கிரேஸ் அவர்களைத் தெரியுமா உங்களுக்கு…!தன்னுடன் பத்தே ஆண்டுகள் வாழ்ந்து சாதிவெறி அரி வாளுக்கு இரையாகிப் போனாலும் தன் கனவனின் காதல் நினைவுகளாளேயே காலம் கழித்த அமிர்தம் கிரேஸ் அவர்கள் புறக்கணிக்கப்பட்டது எதனால்…?
இங்கே காதல் என்ற சொல் உயிர்பெருவதற்கு சாதி என்ற சொல் அழிய வேண்டியிருக்கிறது.வரலாற்றில் சாதி பார்த்து தான் காதலர்கள் உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்கள்.இங்கேயே மகத்தான காதல் உயிருருக்கள் இருக்கும் போது கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும், மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் மகளான அமராவதிக்கும் இடையே மலர்ந்த காதலை பற்றியே நாம் பேசி திரிகிறோம்.ஷேக்ஸ்பியரின் துன்பயியல் படைப்பு ரோமியோ ஜூலியட்டை கதைகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.ஒரு இணையரைப் புகழ ராமனையும் சீதையையும் போல என்றே பிதற்றித் திரிகிறோம்.
சாதி எனும் புதைகுழியை காதலர்கள் கடக்க வேண்டுமென்றால்,சாதியை மீறி காதலிப்பது நாடகக் காதலென்றும் இளம்பருவக் கோளாறு என்றும் தூற்றப்படும் இவ்வேளையில் காதலர்கள் முதலில் சாதி ஒழிப்புப் போராளிகளையும் அவர்களின் காதலையும் உள்வாங்க வேண்டும்.சாதி ஒழிப்புப் போராளிகளின் மகத்தான காதல் வாழ்க்கையை உயர்த்திப் பிடிக்கும் போதே சாதியக் கழிவுகள் இப்பூவுலகை விட்டு அகலும்…! பூமியில் மனிதங்கள் மலரும்…!
ஆகவே காதலர்களே காதல் செய்வீர்….
அம்பேத்கர் ரமாபாயைப் போல….
ஜோதிராவ் பூலே சாவித்ரிபாயைப் போல…..
ரெட்டமலை சீனிவாசன் ரெங்கனாயகியம்மாள் போல….
இம்மானுவேல் சேகரன் அமிர்தம் கிரேஸ் போல…..
காதல் செய்வீர்..! வாழ்வீர்..!
காதலர் தின வாழ்த்துக்கள்…!
..மதிப்பிற்குரிய மங்கை பானு
Comments
Post a Comment