சந்தையூர் தீண்டாமை சுவர்..!Santhayur Caste Wall...!


மதுரைக்கு அருகே உள்ள சந்தையூர் இன்று சண்டையூராய் காட்சித் தருகிறது.சாதியத் தீ இன்றைக்கு தலித்துகளின் மனங்களையும் பற்றிக் கொண்டு ஒரு புதிய பரிணாமத்தை உருவகப்படுத்துகிறது.ஆதிக்க சாதிகளை எதிர்த்து பறையர்கள் ,தேவேந்திரர்கள் அருந்ததியர்களுக்கு இடையிலான அரசியல்  ஒற்றுமை இன்றைக்கு குலையக் காண்கிறோம்.அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சிக் காலத்தில் இம்மூன்று சமூகங்களும் ஒன்றாகவே களத்தில் இருந்தன.ஆனால் இன்றோ அக்களம் குலையக் காண்கிறோம்.அதற்கான காரணங்களை சமூக பொருளியல் அடிப்படைகளை அடையாளம் காண்பதும் அவசியம் என்றே கருதுகிறேன்..
பறையர் சமூகத்திலிருந்து பிறந்த ரெட்டைமலை சீனிவாசன் அவர்களும்
தேவேந்திர சமூகத்திலிருந்து பிறந்த இம்மானுவேல் சேகரன் அவர்களும்
அருந்ததியர் சமூகத்திலிருந்து பிறந்த எல்.சி.குருசாமி ஜகநாதன் அவர்களும் நடத்திய அந்த போரட்டங்களிலிந்து,அவர்கள் முன் வைத்த அந்த கோரிக்கைகளிலிருந்து தற்போதைய தலித் அரசியல் களம் வேறுபட்டே இயங்குகிறது.அவர்கள் அப்போதே வைத்த கோரிக்கைகள் இன்னும் வெல்லப்படாமலேயே இருக்கிறது.அண்ணல் அம்பேத்கரும் மேற்கூறிய தலைவர்களும் அக்காலகட்டத்தில் உருவாக்கிய அரசியல் களம் இன்றைக்கு குலைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இன்றையத் தலைவர்களால் அந்த மகத்தான தலைவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் தியாகமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.


அண்ணல் அம்பேத்கர் அவர்களின் காலத்திலேயே உட்சாதி சண்டைகள் இருக்கத்தான் செய்தன.மஹாராஷ்டிரத்தில் மஹர்களுக்கும் மாங்குகளுக்கும் உட்சாதி பகைமை எழுந்தபோது,அதை அம்பேத்கர் அணுகியதும் ஒற்றுமையை வலியுருத்தியதும் இன்றும் சிறப்பான ஒன்றாகவே இருக்கிறது.

சாதி ஆதிக்கவாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள முரணும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையே உள்ள முரணும் வெவ்வேறு கோணங்களிலேயே அனுக வேண்டியிருக்கிறது.நட்பு முரணையும் பகை முரணையும் நாம் தெளிவாக அனுக வேண்டியிருக்கிறது.
அந்த வகையில் தான் உத்தப்புரம் சுவரும் சந்தையூர் சுவரும் ஒன்று அல்ல என்றே நான் கருதுகிறேன்.

அதே நேரத்தில் சந்தையூரில் அருந்ததியர் செல்லும் பாதையை கோயில் சுற்று சுவரால் அகலப்படுத்தி சுறுக்கியிருப்பதில் தீண்டாமை இருக்கவே செய்கிறது.சாதிய அடையாளம் இதில் தெட்டத்தெளிவாகவும் தெரிகிறது.அருந்ததிய மக்களை சாதியை சொல்லித் திட்டுவது,அருந்ததிய பெண்மணி அமைப்பாளராக இருக்கும் அங்கன் வாடிக்கு தன் சாதி குழந்தைகளை பறையர் அனுப்ப மறுப்பது,அருந்ததிய இளைஞர்கள்,பெண்களை அடித்து காயப்படுத்தியிருப்பது ஆகிய அனைத்திலும் சாதி தெட்டத் தெளிவாகவே இருக்கிறது.இந்த சுய சாதி பெருமிதத்தோடும் அருந்ததியர் மக்களை அவர்கள் செய்யும் தொழில் கொண்டு இழிவு செய்வதும் பெரும்பாலும் பறையர் சமூகத்தின் படித்த அரசு ஊழியர்களாகவே உள்ளனர்.

பறையர் சமூகத்தின் படித்த அரசு ஊழியர் வகையினர் அருந்ததியர் சமூகத்தினை இணைத்துக் கொண்டு அங்கே மறவர் பகுதியிலுள்ள முத்தாலம்மன் கோயிலில் நுழைவதற்கு பதிலாக அருந்ததிய மக்களை துன்புருத்துவது இயலாமையின் உருவமாகவும் ஒரு வெற்றுவேட்டு கௌரவத்தோடுமே இயங்கிவருகிறார்கள்.அந்த வகையினரை உணர்ந்துதான் ``நான் இழுத்து வந்த தேரை நீங்கள் முன்னோக்கி இழுத்துச் செல்லவில்லையென்றாலும் பரவாயில்லை.தயைகூர்ந்து பின்னோக்கி மட்டும் இழுத்துச் செல்லாதீர்கள்என்று அண்ணல் வருந்தினார்.
இந்த வகையோரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே அருந்ததியர்கள் கல்வி,வேலை வாய்ப்பில் இடப்பங்கீட்டைக் கோரினார்கள்.
தாழ்த்தப்பட்ட சமூகங்களில் உருவாகியுள்ள தலித் பார்ப்பண வர்க்கம் சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு தடைக்கல்லாக நிற்கிறது என்பதைத்தான் சந்தையூர் தீண்டாமைச் சுவரும் நமக்கு மெய்ப்பிக்கிறது
சொத்துடைமையற்ற பறையர் சமூகத்தின் அரசு ஊழியர்கள் அவ்வூழியர்களை சார்ந்தவர்கள் தன் நிரந்தர வேலையையே சொத்தாகக் கருதி சொத்துடைமையற்ற துப்புறவு தொழில் புரிகிற அருந்ததியர்களை இழிவாகப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதே..!
உடனடியாகக் களையப்படக் கூடியதே..!

இந்த இரு சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் அமர்ந்து பேசி அந்த சுவரை இடிப்பது என்பதே அங்கே நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கான ஒரே வழி..!

Comments

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016