திருநர் தீட்டாத வீடோவியம்..!!!!!

 திருநர் தீட்டாத வீடோவியம்..!!!!!

மனித சமூகம் நாகரீகம் அடைந்ததின் ஒரு குறியீடு வீடு. சமூகத்தில் வீடு வகிக்கும் பாத்திரம் மகத்தானது.உயிரற்ற கல்லும் மண்ணும்,கூரையும் ஓலையும்,தரையும் தளமும் உயிருள்ள ரத்த உறவுகளின் உணர்வுகளை குழைந்து எழுந்து நிற்கும்.சில பழங்காலத்து வீடுகள் மரபுவழிப்பட்ட தங்கள் உறவுகளின் உயிரோட்ட உணர்வுகளை கடத்திக் காட்சிப் படுத்தும் அற்புத அமைப்பாக இயங்கும்.அந்த அமைப்பின் ஏதோ ஒரு பகுதி சிதிலமடைந்தால் அங்கே வசிக்கும் உசுருகள் பதறித் துடிக்கும்.ஏனெனில் அது அவர்களின் முன்னோர் கல்லாலும் மண்ணாலும் வரைந்திட்ட வீடோவியம். சில புது வீடுகள் அங்கே குழுமி வாழும் ரத்த உறவுகளின் இன்பங்களை ரசித்து சுவைக்கும்.சில சமையம் இவர்களை உறசிச் செல்லும் துன்பங்களைக் கண்டு மனம் வெதும்பும்.ஏனெனில் இவர்கள் தங்களின் நிம்மதியின் இன்பத்திற்காகவே அந்த வீடோவியத்தை வரைந்திருக்கிறார்கள். இன்றைக்கு பல்வேறு காரணங்களால் மக்கள் தங்கள் வீட்டோவியத்தை இழந்து நிற்கிறார்கள். 




பொருளாதார வெறி உச்சமடைந்து போர் வெறியாக மாறும் போது தனது பீரங்கிகளால், எளிய மனிதர்கள் வரைந்திட்ட வீட்டோவியத்தை பெயர்த்தெடுக்கிறது.பொருளாதார வெறி உழைப்பை உறிஞ்சுவதற்காக தொழிற்சாலைகளுக்கும்,மலைச் சரிவுகளில் உருவாக்கப் படும் தோட்டங்களுக்காகவும் அவர்களை வீட்டிலிருந்து உறிஞ்சி இழுக்கிறது. போர் வெறி அவர்களை அங்கிருந்து பெயர்த்தெடுக்கிறது.பொருளாதார வெறி அவர்களை அங்கிருந்து உறிஞ்சி இழுக்கிறது. பொருளாதார வெறிக்கும் போர் வெறிக்கும் சற்றும் குறைந்ததல்ல பாலாதிக்க வெறி. பாலாதிக்கம் பேதமை வடிவம் கொண்டதல்ல. அது சொத்துடைமையின் இன்னொரு வடிவம். இந்த பாலாதிக்க வெறியினால் தான்,இந்த சொத்துடைமையின் கொடிய வடிவினால் தான் எங்கள் பாலினம் சொந்த தேசங்களில் அகதிகளாகத் திறிகிறது.நீங்களிடும் பிச்சையீட்டி வாழ்கிறது.


வீட்டோவியத்தை வரையும் ரத்த உறவுகளையும்,உழைப்பெனும் சொந்தக் கரங்களையும் இழந்து துடிக்கிறது. எங்கள் மீது எந்த பீரங்கிகளும் குண்டுகளைப் பொழியவில்லை. தொழிற்ச்சாலைகளும் மலைச் சறிவுத் தோட்டங்களும் எங்களின் உழைப்புச் சக்தியை உறிஞ்சிட தயாராகவுமில்லை.இருந்த போதிலும் நாங்கள் வீடிழந்து திரிகிறோம்.சொந்த தேசத்தின் அகதிகளாக அலைகிறோம். நூறு காக்கைகளுக்கு ஒரு பருக்கை சோறிடுவது போல எங்கள் பாலினத்தவருக்கு எங்கோ ஒரு மூலையில்,ஏதோ சொற்ப அளவில், வாழ்வதற்கே தகுதியற்ற வீடுகளை கொடுத்து அங்கே எங்களை குடியிருக்க சொல்கிறது அரசு. புலம்பெயர்ந்து வந்தவர்களுக்குக் கூட இங்கே சட்டம் இருக்கிறது சில உரிமைகள் இருக்கிறது.ஆனால் எங்களுக்கோ அது மறுக்கப்படுகிறது. ஈழம்,சிரியா,மியான்மர் போன்ற நாடுகளின் புலம் பெயர்ந்தோர் வாழ்வு கடலலைகளிலே தத்தளிக்கிறது.எங்களின் வாழ்வோ நிலங்களிலே தத்தலிக்கிறது.

பட்டுக்கோட்டையார் இன்றிருந்தால் இப்படி பாடியிருப்பார் ‘’திருநங்கையாய் பிறக்க வைத்தான்…. எங்களை கண்ணீரில் தவிக்க வைத்தான்…! ஆம்…!நாங்கள் சிந்திய கண்ணீர் துளிகளை சேகரித்து வைத்திருந்தால் இந்த சமவெளி என்றோ சமுத்திரமாய் மாறியிருக்கும். உறவுகளால் விரட்டப்பட்டு,பொதுச் சமூகத்தினால் குடியிருப்பு மறுக்கப்பட்டு,அச்சமூகத்திடமே பிச்சையீட்டி வாழ்வோரின் வலியை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதென்றால் நிச்சயம் உங்களுக்குள் இன்னும் மனிதம் மிச்சமிருக்கிறது என்பதே என் கருத்து. நாங்கள் உங்களிடம் பிச்சையீட்டும் போது எப்படி உங்களின் பார்வைகள் எங்கள் மீது நாற்றமெடுக்கும் மலத்தைக் கொட்டுகிறதோ…அது போலத்தான் உறவிழந்த நாங்கள் உங்களிடம் வீடு கேட்டு உங்கள் படியை மிதிக்கும் போதும் அதே நாற்றமெடுத்த மலத்தையே உங்கள் பேச்சால் கொட்டுகிறீர்கள்..! 



சில கணவன்கள் எங்கள் மீது மலத்தைக் கொட்டினாலும் எங்களிடம் அதிக பணத்தைப் பிடிங்கிட வீடு கொடுக்க சம்மதித்தாலும் அங்கே நாங்கள் வாழும் வரையில் அவர்கள் தொடுக்கும் கட்டளைப் போர்கள் ஏராளம்.நம் தேசத்தின் மீது உலக வங்கி செலுத்தும் விதவித கட்டளைகளே அவர்களிடம் தோற்றுப் போகுமளவிற்கு புதுவித கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டேயிருப்பார்கள்.உணவிற்கும் உடைக்கும் உறக்கத்திற்கும் நம்மை சந்திக்கும் நபர்களுக்கும் ஏன் நாங்கள் சிரிப்பதற்குக் கூட அங்கே கட்டளைகள் காத்துக் கிடக்கும்.அவர்களின் கட்டளைகள் இப்போதெல்லாம் சில சில சமயங்களில் தான் எங்கள் இதயத்தைக் கிழிக்கிறது.ஏனெனில் எங்களின் இதயச் சுவர்களின் முக்கால் பாகம் என்றோ மரத்துப் போயிற்று.எங்களின் இதயங்கள் மரத்து போனாலும் அது ஒரு பெருவலியாய் இருந்துகொண்டே இருக்கிறது.எங்களின் வலியை உணராதவர்கள் எப்படி புற வெளியில் மனிதமாய் வாழ்கிறீர்கள் என்பதை சில சமயம் எண்ணி வியப்பேன்..!


 பிச்சையீட்டும் போதும் வாடகை வீடு கேட்கும் போதும் உங்கள் பார்வையும் பேச்சும் கொட்டும் நாற்றமடிக்கும் மலத்திலிருந்து தப்பிக்க எங்களுக்கு நிலம் வேண்டும்…! வீடு வேண்டும்..!
உங்களோடு சம உரிமை சமைக்க எங்களுக்கு கல்வி வேண்டும்..! 
எங்கள் கரங்கள் உழைக்க வேண்டும் அதற்கு வேலை வேண்டும்..! 
நிலமும் வீடும்,கல்வியும் உழைப்பும் மறுக்கப் பட்டவர்கள் அகதிகள்தானே...

Comments

Popular posts from this blog

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

போர் பறவைகள்

உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…!Wishes to all women of the world..!