தியாகத்தால் சிவந்த தூத்துக்குடி




2018 மே 22..

நச்சுப் புகையைக் கக்கும் ஸ்டெர்லைட்டை எதிர்த்த, தூத்துக்குடி அதன் சுற்று வட்டார மக்களின் கோரிக்கைப் பேரணி, ரத்த வெள்ளாமாக மாற்றப்படும் என்று அனில் அகர்வாலுக்கும் அரசுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஸ்டெர்லைட் நிறுவனம் பேரணியாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பாதுகாப்புக் கேட்டு, உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை நாடியதும் நீதி மன்றம் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டதும், துப்பாக்கிச் சூட்டுக்கான கொடியதொரு முன்னேற்பாடுகளே என்பதை மக்கள் அறியாமல் தான் இருந்தார்கள்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்களை சிலந்தி வலையாக அவர்கள் முன்னரே பின்னியிருந்தார்கள்.

மக்களை பூச்சிகளை போல அவர்கள் லாவகமாக பிடித்து சுட்டுத் தின்ற காட்சிகளையெல்லாம் நாம் நேரடியாகவும் நேரலை வழியாகவும் பார்த்தோம்..!
புற்று நோயிலிருந்து விடிவு கேட்டவர்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களை மருந்தாக கொடுக்கும் கொடூரம் அவர்களுக்கே உரியது.
பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகளாகவும் கலவரக்காரர்களாகவும்  சித்தரித்து நியாயம் கேட்ட மக்களை சுட்டுக் கொள்ளும் பானியும் என்றென்றும் அவர்களுக்கே உரியது.!
அரசின் இத்தகைய கொடூர வாதங்கள் வரலாறாக மாறக் கூடாது என்பதற்காகவே மே 26 அன்று நான் மலர்ந்த மண்ணிற்கு பயணித்தேன்...!


எப்போதுமே கண்ணுக்கு குளிர்ச்சியாக  உப்பள்ளங்களின் வெண்மையை,நாசிக்கு வாசமாக உப்புக் காற்றை  பரிசளிக்கும் தூத்துக்குடி அன்றைக்கு கூக்குரல்களையும் மாதுயரத்தையும் மறைத்து வைத்திருக்கிற,  வெறிச்சோடிய வீதிகளையும்  துப்பாக்கிகளையும் லத்திகளையும் சுமந்து திரிகிற காட்டுமிராண்டிகளையுமே எனக்கு காட்டியது.
மக்கள் மருத்துவமணைகளிலும் வீடுகளிலுமே இன்னுமும் அடைபட்டுக் கிடந்தார்கள்.தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக ஊடகங்கள் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த மக்கள் நோயாளிகளுக்காக மருந்தகங்களுக்கும் குழந்தைகளுக்காக பால் நிலையத்திற்கும் வர அச்சப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே அடங்கிக் கிடந்தார்கள்.இளைஞர்கள் உள்ள வீட்டு தாய்மார்கள் தன் மனதில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் வீட்டினுள் இருந்தார்கள். " அந்த காட்டுமிராண்டிகள் தன் வீட்டுப் பக்கம் வராமல் இருக்கட்டும்.!தன் பிள்ளைகளை இழுத்துச் செல்லாமல் இருக்கட்டும்" எனும் பய உணர்வே அவர்களிடம் மேலோங்கியிருந்தது.!




பல வீடுகளும் வீதிகளும் வெறிச்சோடி இருந்தன. மக்களெல்லாம் மருத்துவமனைகளிலேயே குழுமியிருந்தார்கள்.அவர்கள் உயிரிழந்தோரின், குண்டடி பட்டோரின் உறவினர்களாகவே இருந்தார்கள்.கண்ணீர் சிந்திய அவர்களின் கண்கள் வரண்டு போய் இப்போது கோபத்தை சுமந்து கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது.
துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ஸ்னோலினின் தோழி இன்பேண்டா தடியடியில் கொடூரமாக தாக்கப்பட்டு இந்த அரசு பொது மருத்துவமனையில் தான் சேர்க்கப்பட்டுள்ளார். 26 ஆம் தேதி அவரை நான் சந்திக்கும் போது மாலை மூன்று மணி ஆகியிருந்தது.
23 வயதுத் தக்க இன்பெண்டாவின் முதுகு,கழுத்தில் பட்டிருக்கும் லத்தி காயத்தை விட அவளின் கண்களில் அவளுடைய தோழி ஸ்னோலினின்  மரணம் ஏற்படுத்திய காயம் அதிகமாகவே தெரிந்தது.அவள் இன்னும் அந்த காயத்திலிருந்து மீளவே இல்லை.அவளிடம் பேசி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் முதலில் யோசித்தேன்.இருப்பினும் உலகுக்கு உண்மை தெரிய வேண்டுமல்லவா...?


அதனால் கனிவோடு அவளை விசாரித்தேன்...சில உரையாடலுக்குப் பிறகு 'ஸ்னோலின் எப்படிமா இறந்தா..?' என்று நான் கேட்டதும் முதலில் அவளிடமிருந்து வார்த்தைக்கு பதிலாக கண்ணீரே வழிந்தது.கண்ணீரின் வழியே அவள் வார்த்தைகளை உதிர்த்தாள் " அதிகம் மக்கள் கலந்து கொண்ட பேரணியை பார்த்ததும் இந்த மக்கள் கூட்டம் அரசாங்கத்தை எப்படியும் பணிய வைக்கும். இவ்வளோ மக்கள் கூட்டத்தை  பார்த்தால் அரசாங்கம் ஸ்டெர்லைட்டை மூட கண்டிப்பாக உத்தரவிடும் ! என்ற நம்பிக்கையே எங்களில் பெரும்பாலானோருக்கு இருந்தது.இதே நம்பிக்கை தான் ஸ்னோலினுக்கும் இருந்தது.நான், ஸ்னோலின், இன்னொருத் தோழி மூவரும் பேரணியில் ஒந்றாகவே பயணித்தோம்.ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நாங்கள் உற்சாகமாகவே நடந்து சென்றோம். வி.வி.டி சிக்னல் அருகே எங்கிருந்தோ கற்கள் சரமாறியாக  வந்து பேரணியின் நடுவே விழுந்தது.அந்த கற்கள் என் தலையில் வீக்க காயத்தை ஏற்படுத்தியது.உடனே போலிஸ் தடியடி நடத்தத் தொடங்கியது.சிறிது நேரத்தில் கண்ணீர் புகை குண்டை வீசினார்கள்.அந்த புகை மூட்டத்திலும் பலர் தாக்கப்பட்டார்கள்.நாங்கள் அந்த புகையை சுவாசிக்காமல் இருக்க கண்களை பாதுகாத்துக் கொண்டு துப்பட்டாக்களை முகத்தில் கட்டிக்கொண்டு, இந்த தாக்குதலிலிருந்து  மீறி முன்னேறிச் சென்றோம்.பேரணியின் முன் வரிசையில் 20 க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் அதன் பின்னால்  பெண்களும் அதற்கு பின்னால் ஆண்களும் பேரணியில் அணிவகுத்தார்கள். போலிசின் தடுப்பு அரண்,கல் வீச்சு,கண்ணீர் புகை குண்டு வீச்சு அணைத்தையும் மீறி கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறியது.முதலில் பெண்களும் திருநங்கைகளும் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தோம் ஆண்களில் சிலர் தான் உள்ளே நுழைந்தார்கள்.அப்போதெல்லாம் ஆட்சியர் அலுவலகம் அமைதியாகத்தான் இருந்தது. நாங்களும் அங்கே அமைதியாகத்தான் அமர்ந்திருந்தோம்.திடீரென ஆட்சியர் அலுவலகத்திலிருந்து போலிஸ் கும்பலாக லத்தியால் தாக்கியபடியே கூட்டத்தை நோக்கி ஓடி வந்தார்கள்.நாங்களும் ஓடத் தொடங்கினோம்.என்னோடும் ஸ்னோலினோடும் வந்த ஒரு பெண் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஸ்பீட் ப்ரேக்கர்ல கால் தடுத்து விழுந்துட்டா.. அவலுக்கு வீசிங் வந்திடுச்சி.அவள நானும் ஸ்னோலினும் தூக்கிக் கொண்டிருந்தோம். அப்போது தான் குண்டுகள் சரமாரியாக பாயத் தொடங்கின.முதல் இரண்டு குண்டுகளில் நாங்கள் தப்பித்தோம்.அடித்து வந்த குண்டுதான் ஸ்னோலின் வாயை துளைத்து உயிரைக் குடித்தது.சில நிமிடம் நான் என்னையே மறந்து விட்டேன்.பிறகு அவர்கள் என்னை லத்தியால் தாக்கியது கூட எனக்கு மறத்து தான் போயிற்று.அதன் பிறகு நாங்கள் தான் மிகவும் சிறமப்பட்டு ஸ்னோலிந் உடலை மருத்துவமனைக்கு தூக்கி வந்தோம். வழியில் 20 க்கும் மேற்பட்டோர் குண்டடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்கள்".என்று இன்பண்டா அந்தக் கொடியக் காட்சிகளை படபடப்போடு சொன்னாள்.

இன்பண்டா வார்த்தைகள் விவரித்த ரத்தக் காட்சிகளை மனதிற்குள் சுமந்துக் கொண்டே மாலை 4 மணிக்கு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த திரேஸ்புரம் ஜான்சி அவர்களின் இல்லத்திற்கு சென்றேன்.அந்த வீடு முழுக்கவே மாபெரும் சோகம் கும்மியிருட்டாய் குழுமியிருக்கிறது.பத்தாம் பதினொன்னாம் வகுப்பு படிக்கும் ஜான்சியின் இளைய மகள்களின் ஏக்கமும் சோகமும் சொற்களில் விவரிக்க முடியாததே...!



இளம் வயதில் தாயை இழந்த அவர்களின் சோகத்தின் அருகில் கூட என்னால் நிற்க முடியவில்லையே...அந்த பிள்ளைகள் எப்படி வாழ் நாள் முழுக்க இந்த சுமையை சுமக்கப் போகிறார்கள்..? எனும் போது உள்ளபடியே நான் நிலை குலைந்து தான் போனேன்.!
பெரும் சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் ஜான்சியின் அக்காவிடமும்,ஜான்சியின் கனவரிடமும் சம்பவத்தை விசாரித்தோம். வழிந்தோடும் கண்ணீர் வழியே ஜான்சியின் அக்கா எங்களிடம் விவரிக்கத் தொடங்கினாள்..பக்கத்து பகுதியில் உள்ள தன் மூத்த மகளுக்கு மீன் வாங்கிக் கொடுக்கச் சென்றபோது தான் பாலத்திற்கு அருகில் உள்ள  போராட்டக்காரர்களை கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்த்திருக்கிறாள் ஜான்சி.வேடிக்கை பார்த்தது குத்தமென அவள் முகத்தில் குண்டு மழை பொழிஞ்சிருச்சி போலிஸ்.அவளுடைய ஒரு பக்க முகமே சிதஞ்சு போச்சி.அவள் கீழே சறிஞ்ச உடனேயே அவளை ஒரு பேனர்ல சுத்தி போலிஸ் வண்டியில ஏத்திக்கிட்டு போய்ட்டாங்க.ஆஸ்பிட்டல்ல நாங்க போய் விசாரிச்சப்ப ''நீங்க சொல்ற வயசுல எந்த பாடியும் இங்க வர்லன்னு" முதல்ல மறுத்தவங்க, நாங்க சண்ட போட்ட பிறகு என் தங்கை போட்டிருந்த வளையல காண்பித்தாங்க...! ரத்தம் தோய்ந்த அந்த வளையலை பார்த்த போது நானும் என் தங்கை வீட்டுக்காரரும் கதறி அழுதோம்..! போராடுனுவங்க எல்லாம் ஆயுதம் வச்சிருந்ததா அரசாங்கம் சொல்லுது. என் தங்கச்சி வச்சிருந்த ஆயுதம் அவள் மகளுக்கு வாங்கிக் கொண்டு போன மீன் தான்.மீன் புடிச்சாலும் சுட்டுக் கொல்றாங்க..மீன் வச்சிருந்தாலும் சுட்டுக் கொல்றாங்க.. ! நாங்க எப்படி வாழுறதுன்னு எங்களுக்குத் தெரியல." என சுட்டுக் கொல்லப்பட்ட ஜான்சியின் அக்கா கேட்ட கேள்வில் அடங்கியிருக்கிறது அரசு எந்திரத்தின் அடக்கு முறை அரசியல். ! அடுக்கடுக்காக சோகங்களை மனதிற்குள் சுமந்துக் கொண்டு துப்பாக்கிப் பிசாசு மென்று திண்ண மனிதர்களில் ஒருவரான கிளாஸ்டன் என்பவரின் வீட்டுக்குப் போனோம் அவரின் மனைவி நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் நடந்ததெல்லாம் பொய்யாக இருக்கக் கூடாதா என்று எதார்த்தக் கொடூரத்தை மறுத்து, அந்த கொடிய சம்பவக் கசப்பை நினைவூட்டும் யாருடனும் உரையாடாமல் தனிமையில் தன்னை ஒப்புவித்திருந்தாள். "அம்மா யாரிடமும் பேசமாட்டிங்கிறாங்க.அப்பாவ போலிஸ்காரங்க சுட்டதிலிருந்து அவங்க தனியாகத்தா அழுதுட்டிருக்கிறாங்க". என்று கூறும் கிளாஸ்டனின்  11 வது படிக்கும் மகள் கூறுவதைக் கேட்டு கண் கலங்காதவர்கள் மனிதத்தோடே இருக்க முடியாது. அவளிடம் ஆறுதல் சொல்லவும் முடியாமல் உறையாடவும் முடியாமல் கலங்கி நின்ற போது அவளே பேசினால்..." எனக்கு எங்க அப்பா வேணும்கா..எங்க அப்பாவை இவர்களால திருப்பித் தர முடியுமாக்கா...? இவங்கள விடக்கூடாதுக்கா...! என அவள் கூறிய வார்த்தை என் சுமை அடுக்கை மேலும் கூட்டியது. 



மாலை 7.00 மணிக்கு பேரூரணி சிறை வாயிலுக்குச் சென்றேன். வல்லநாட்டு ஆயுதக் கிடங்கில்  கொடிய சித்திரவதை அனுபவித்து நீதி மன்றத்தின் துணையோடு கண்டெடுக்கப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டு நடுவர் மற்றும் வழக்குரைஞர்களின் உதவியால் சிறையை விட்டு வெளியே வரும் 61 ஆண்களை கண்டேன்.சிலருக்கு கனுக்கால் எலும்பு உடைந்து வீங்கிப் போயிருந்தது.பலரின் முதுகுகள் லத்தி அடியால் கண்ணிப் போயிருந்தது.சிலருக்கு தலையில் காயங்கள் இருந்தது.வல்ல நாட்டு ஆயுதக் கிடங்கில் அவர்கள் கடத்தப்பட்டு ,தாக்கப்பட்ட விதத்தை  விவரிக்கும் போது ஹிட்லரின் சிதரவதை முகாமும்,ராஜபட்சேவின் கொடுங்கோண்மையுமே என் நினைவில் வந்து சென்றது.ஹிட்லரும் ராஜபட்சவும்  இணைந்த உருவமாகவே   2018 மே 22 காலைப் பொழுது எடப்பாடியும் மோடியும்  தன் ஆட்சி அதிகாரத்தை துப்பாக்கித் தோட்டாக்களால் நிலை நிறுத்திக் கொண்டார்கள். மூலதன குவியலின் அடியாட்படை அம்மனமாய் தூத்துக்குடி வீதிகளில் துப்பாக்கி ஏந்தி திரிந்தது.நிதி மூலதனம் விதவித அடக்குமுறையாளர்களை ஈன்றெடுத்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் அதை எதிர்த்து போரிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று என்னளவில் வரலாற்றை கொஞ்சம் அசைபோட்டுக் கொண்டே அன்றிரவு உறங்க முடியாமல் தவித்தேன்.நான் விளையாடிய இடங்கள்,நான் படித்த பள்ளிக் கூடம்,நான் பழகிய நட்புகள்,உறவுகள் அனைத்திலும் ஆழமான ஆறாத சோகம் பதிந்திருந்தது..என்னிலும் தான்..,!
.எங்கள் நகரம் நரக கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தது.அச்சோக கீதம் அன்றின் என் உறக்கத்தை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தியது.
மறு நாள் பகல் 12 மணிக்கு ஸ்னோலின் அம்மாவை பார்த்தேன் அழகிய மகளை,போர்ப் பெண்ணை இழந்த பெருந்துயரில் வீழ்ந்து கிடந்தாள் அந்த தாய்..! புத்திர சோகத்தை சுமக்கும் அவளிடம் விவரங்களை கேட்கும் துணிவு என்னிடம் இல்லை..! "இந்த நாட்டிலுள்ள எல்லா பெண்களும் உனக்கு மகள் தாம்மா " என்று சற்று ஆறுதல் மட்டுமே கொடுத்து வர முடிந்தது.உண்மையில் அவள் இந்த தேசத்தின் தாய்...!



வீரஞ்செரிந்த  பேரணி அடுக்கில் முதலடுக்கில் சென்ற என் திருநங்கை சமூகத்தவரை மாலை 4 மணிக்கு சந்தித்தேன்.இதுவரையில் இந்திய அளவில் பொதுமக்கள் திரள் பேரணிகளில் திருநங்கை சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் கிடைத்ததில்லை.ஆனால் அந்த பாலின சனாதனத்தை தகர்த்திருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணி.ஆயிரக் கணக்கான மக்கள் திரள் பேரணியில் என் பாலின சமூகத்தை முன்னணியாய் அமர்த்தி அழகுப் பார்த்திருக்கிறார்கள் தூத்துக் குடி மக்கள்.என் சமூக தோழியான ரீமா கூறும் போது " என் சமூகம் பல வகையான புறக்கணிப்புகளையும் தீண்டாமையும் கண்டிருக்கிறது.ஆனால் நாங்கள் கண்டிராத ஒரு கொடிய அரச அடக்குமுறையை  அன்று தான் கண்டோம்...! எங்களின் பலர் முதுகில் லத்தி காயம் இருக்கிறது.எங்கள் கண்ணெதிரே தான் ஸ்னோலின் குண்டடிப் பட்டு சுருண்டு விழுந்தாள்.எங்களின் லத்தி காயம் கூட ஆறி விடும் ஆனால் எங்கள் கண்ணெதிரே உயிரோடு இருந்தவர்கள் பிணமான அந்த காட்சி காயம் என்னாளும் ஆறாது..!" என்று அவள் கூறும் போது மரண காயம் ஏற்படுத்திய வலியில் அவள் துடிப்பதை உணர்ந்தேன்..!
28 ஆம் தேதி காலை பண்டாரம்பட்டிக்கு பயணித்தேன்..! அந்த கிராமத்தில் 30 பெண்கள் தோட்டாக்களுக்கெல்லாம் அஞ்சாமல் இன்னுமும் உறுதியோடு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு தான் இருந்தார்கள்...! அப்போராட்டக் களத்தில் இருந்த ஒரு மூதாட்டியின் அருகில் அமர்ந்து அவரிடம் விசாரித்தேன்.மேனியில் சுருக்கம் இருந்தாலும் மனதில் சுருக்கம் விழாமல் உறுதியோடே பேசினார் அவர். "மக்கள் தங்கள் உரிமைக்காக போராடும் போது அரசு  மக்களை சுடுவதும் கொல்வது புதுசு இல்ல தாயி.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் நானும் தான் கலந்துக்கிட்டேன்.அந்த போரட்டத்தில் போலிஸ் அடிச்சி விரட்டியதுல என் கண் முன்னாலேயே என்னோட வந்தவங்க நிறையப் பேர் தாமிரபரணி நீருல மூழ்கி செத்தாங்க.நானும் அந்த போராட்டத்திலே இறந்திருக்கனும் தாயி.இப்ப நான் வாழ்ந்துட்டிருக்கிற வாழ்க்கை கூடுதலான வாழ்க்கை.இதுல இந்த கம்பெனிக்காரன விரட்டாம என் உசுரு கட்டையல வேகாது.." என அம்மூதாட்டி உறுதிபட கூறி முடித்ததும் எவ்வளவு மகத்தான போராளிகளை எளிமையாக உள்ளடக்கி இயங்குகிறது இந்த சமூகம் என பிரமித்து போனேன்..!
அடுத்து கார்ப்பரேட் கம்பெனியை எதிர்ப்பதில் உலகுக்கே முன் மாதிரியாக விளங்கக்கூடிய குமரெட்டியாபுரம் மக்களை சந்தித்தேன்..நடிகர்களும் அரசியல் தலைகளும் வந்து பிரபலத்தைத் தேடிச் சென்ற அந்த வேப்பமர நிழல் வெறிச்சோடி கிடந்தது.அங்கே இப்போதும் ஐந்தாரு பெண்கள் அமர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன். அங்கேயும் மூதாட்டிகளே உறுதியோடிருந்தனர்.அதில் ஒருவர் என்னிடம் கூறும் போது "இளசுகளே ஊருக்குள்ள இல்ல தாயி.இந்த போலிஸ்காரனுங்க அடிக்கடி துபாக்கி தூக்கிட்டு வரதால இளசுகளெல்லாம் எங்கோ பறந்து போயிடுச்சிங்க.இப்பவும் சொல்றோம், அந்த கம்பெனியை மூடாம எங்க போராட்டம் ஓயாது...! என அவர் கூறும் போது அந்த பழமையான வேப்பமரத்தினுள் பாய்ந்திருக்கும் வைரம் போலவே மூதாட்டியின் வார்த்தைகள் இருந்தது. அந்த வேப்பமரத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தேன். இப்போதைக்கு அம்மரத்தின் பறவைகள் துப்பாக்கிச் சத்தத்தில் பறந்தோடியிருக்கிறது.நிச்சயம் பறவைகள் மரம் வரும்.அப்போது அவை வெற்றி கீதத்தை இசைக்கும். என்பதாக நினைத்துக் கொண்டே திரும்பினேன்.

அன்று மாலை தோழர் தமிழரசன் அவர்களின் தமிழீழ இல்லத்திற்கு சென்றேன்.அந்த போராளியின் வீடு சில சுவரொட்டிகளோடே வரவேற்றது.அவரின் வீட்டை மார்க்ஸ்,அம்பேத்கர்,ஈ.வே.ரா வின் படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.தோழர்.தமிழரசன் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. அவருடைய அன்ணன் அன்னி அவர்களின் பெண்கள் என அனைவரோடும் உரையாடினோம்.
தோழர்.தமிழரசன் அவர்கள் தனக்கென்று ஒரு இணையை தேடிக்கொள்ளவில்லை என்றாலும் அவர் உறவுகளுக்கும் ஊருக்கும் ஒரு ஆணி வேராகாவே இருந்திருக்கிறார் என்பது உறவினர்கள் இவரைப் பற்றி கூறுவதிலும் இவரின் உயிர் தியாகத்தினாலும் நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.பொதுவாகவே புரட்சியாளர்கள் வாழும் போது தான் அவர்களுடைய உறவினர்களுக்கு அரசிடமிருந்து அச்சுருத்தல்களும் மிரட்டல்களும் சித்திரவதைகளும் வரும்.  ஆனால் தோழர் தமிழரசன் தியாகியானப் பின்னும் அவரின் குடும்பத்திந் மீது அரசு தன் கொடூரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.தோழரின் அன்னியை மருத்துவமனைக்குள்ளேயே வைத்து தாக்கியது,உடலை வாங்க சொல்லி தோழரின் அண்ணனை கடத்திக் கொண்டு போய் வைத்துக் கொண்டு மிரட்டியது போன்ற கொடூரங்களை சோகத்தில் மூழ்கியிருக்கும் தோழரின் குடும்பத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது காவல் துறை.!

கொடூர தனத்தின் விவரிப்புகளை உள்வாங்கியபடியே மாலை 4.30 மணிக்கு குண்டடி பட்டிருக்கும் தோழர்களை சந்திக்க மருத்துவமனை சென்றேன். அவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது தான் தமிழக அரசு ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடும் உத்தரவை பிறப்பித்திருந்தது.அதை அவர்களிடம் சொன்ன போது அவர்களிடமிருந்து சிறு மகிழ்வும் பெரும் கோபமும் வெளிப்பட்டது. "இத எப்பவோ இந்த அரசு செஞ்ருக்களாமே..? எங்க உசுர குடிச்சிட்டு,எங்களையெல்லாம் முடமாக்கிட்டு தான் அந்த பிசாசு கம்பெனியை இந்த அரசு மூடும்னா இது யாருக்கான அரசு..! மக்களுக்கா..? வேதாந்தாவிற்கா...? என்று ஒரு இளைஞர் கேட்ட கேள்வியைத் தான் உலகமயம் தனியார்மயம் தாராளமயத்தினால் பாதிக்கப்பட்டு  உலகெங்கிலும் அதை எதிர்த்து போராடும் மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு என்பது யாருக்கானது...?

இந்த ஆழமான கேள்வியை அசைபோட்டபடியே இரவு வீடு  திரும்பினேன்..! அன்றிரவும் போராட்டக் களத்தின் ரத்த சாட்சிய விவரிப்புகள் என் உறக்கத்தை முழுமையாக விழுங்கியது.
மறுநாள் போராட்டக் களத்தில் தியாகியான மக்கள் அதிகாரம் தோழர் உட்பட தியாகிகளின் குடும்பங்களை சந்திக்க நினைத்து சந்திக்க முடியாமலே போனது.நிச்சயம் கூடிய விரைவில் அவர்களை நான் சந்திப்பேன்.ஏனெனில் அவர்கள் தான் உலக பணக்காரன் வேதாந்தாவிடமிருந்து எங்கள் மண்ணை காத்தவர்கள்.தூத்துக்குடி உள்ளவரை...கார்ப்பரேட் கொடூரங்கள் உள்ளவரை அவர்கள் தியாகம் என்றென்றும் மக்கள் நெஞ்சங்களிலும் போராட்டக் களங்களிலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்...!  

ஆம்.....!
போராட்டக்காரர்கள் மரணத்தை வென்றவர்கள்...!


Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016