மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016

மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016

மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016 என்கிற பெயரில் மாற்றுப்பாலினத்தோரின் வாழ்வியலை அழித்து ரசிக்கிறது பாசிச அரசு. மாற்றுப்பாலினத்தோரை குற்றவாளிகளாக சித்தரிக்கும் இம்மசோதாவை திருத்தம் செய்ய கோரி கடந்த ஆண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தின் நிலைக்குழுவில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களை,அமைச்சர்களை (தமிழகத்தைச் சார்ந்தவர்கள் உட்பட) டெல்லியில் நேரில் சென்று எங்களின் வாழ்நிலை குறித்து விளக்கியதோடு எங்களுக்கான வரைவு மசோதாவை திருநங்கைகளே தயார் செய்து  நிலைக்குழுவிடம்  சமர்ப்பித்தோம்.நாடாளுமன்ற நிலைக்குழு எங்களது வரைவு மசோதாவை ஆய்ந்து அலசிய பிறகு எங்களுக்கான கல்வி,வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய சமூகநீதி அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் அளித்தது.அதில் மாற்றுப் பாலினதோருக்கு கண்டிப்பாக இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்கிற வாக்கியமும் இடம் பெற்றிருந்தது. இதையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல் திருநர்களின் கல்வி,வேலைவாய்ப்பு இடப்பங்கீடு பற்றி எந்த ஒரு அறிக்கையும் இடம்பெறாமல் எங்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் வெற்று மசோதாவை வருகிற கூட்டத்தொடரில் நிறைவேற்றக் காத்திருக்கிறது காவி அரசு.இரவோடு இரவாக மாற்றுப்பாலினத்தோரின் வாழ்வியலை அழிக்கும் இம்மசோதா நிறைவேற்றப் பட்டாலும் ஆச்சரியத்திற்கு இல்லை.

அம்மசோதாவில்.

மாற்றுப்பாலினத்தோர் என்பவர் முழுமையான ஆணாகவோ/முழுமையாக பெண்ணாகவோ அல்லது பாதி ஆணாகவோ/பாதி பெண்ணாகவோ அல்லது பிறக்கும்பொழுது இரு உறுப்போடு பிறந்த குழந்தைகள்
என்று ஒரு குழப்பமான வரையறை வகுத்து காவியின் தெய்வமான அர்த்தநாரீஸ்வரரை மையமாக வைத்து இவ்வரையறையை தயார் செய்திருக்கிறது .நாங்கள் எத்தனையோ முறை எங்களின் உயிரின் இயங்கியலை விஞ்ஞான அடிப்படையிலிருந்து விளக்கியிருக்கிறோம்,அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறோம்..! ஆனாலும் எங்களை பாதி ஆண் என சுட்டுவதில் ஆர்வத்தோடு அலைகிறது மத்திய அரசு.
மத்திய அரசின் பொருளற்ற ஆர்வத்தை களைந்திட சலிக்காமல் மீண்டுமொருமுறை என் பாலின உயிரியங்கியலை இக்கட்டுரை வாயிலாக எடுத்துரைக்கிறேன்.


நிர்வாணம்...!

எங்கள் முதல் பாலினத்தை வேரறுத்து எங்களுக்குள் இயங்கும் எங்களுக்கான பாலினத்தில் உயிர்த்தெழும் நடைமுறைக்குப் பெயர் தான் நிர்வாணம்.
இது உடையைக் களைந்த நிர்வாணம் அல்ல.பாலினத்தைக் களைந்த நிர்வாணம்.இந்த நிர்வாணத்தில் நாங்கள் உதிரத்தில் நனைவோம்.பல நேரங்களில் உயிர் மரித்து பிணமாவோம்.ஆம்.எங்கள் உயிரை விட மேலானது எங்கள் பாலினம்.மருத்துவம்,அறுவை சிகிச்சை வளர்ச்சியடையா காலத்திலெல்லாம் இந்த நிர்வாணச் சடங்கில் எம் பாலினத்தவர் பலர் மறித்துப் போயிருக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் நிர்வாணத்தையே நாடுவோம்.எங்கள் உயிரை விட மேலானது எங்கள் பாலினம்.ஆணுடலில் பெண் மனதோடு இயங்குபவர்கள் நிர்வாணம் செய்து (தன் பிறப்புறுப்பை அறுத்து அல்லது மாற்றி )ஆணுடலை புதைத்துப் பெண்ணுடலாய் பூத்த போதும் ,நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து பெண்ணாய் மாறிய போதும்,  "ஆணுடல் பாதி பெண்ணுடல் பாதி" என்று வரையறுத்தால் எங்கள் உயிரின் மீது நெருப்பை அள்ளி கொட்டுவது போல இருக்கிறது.மத்திய அரசு கூறுவது போல நாங்கள் " பாதி ஆணாகவோ/பாதி பெண்ணாகவோ" என்று கூறுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம்.நாங்கள் பாதி ஆண்,பாதி பெண் அல்ல.நாங்கள் இரட்டைப் பாலினத்தில் இயங்குபவர்கள் அல்ல.நிர்வாணத்திற்கு பிறகு நாங்கள் ஒரே பாலினம் தான்! அது மாற்றுப்பாலினம் என்பது மட்டும் தான்...! அதனால் தான்
"உன்னுடைய அர்த்த நாரீஸ்வரர் கதாபாத்திரத்தையெல்லாம் தூக்கி தூர வீசு, மத்திய அரசே...!" என்று உரைக்கின்றோம்.
நாங்கள் அர்த்த நாரீஸ்வரர்கள் அல்ல.நாங்கள் திருநங்கைகள்.உங்கள் மத கதாபாத்திரத்தை எங்கள் வாழ்வின் மீது திணிக்காதீர்கள்..!

அடுத்து  புதியதாக வரும் திருநங்கை மற்றொரு திருநங்கையிடம் அடைக்கலமாகக் கூடாதாம்.அப்பப்பா இப்படியொரு முடிவுக்கு வந்தடைய இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ...?!
குடும்பத்தீண்டாமை,சமூகதீண்டாமை,அரசு தீண்டாமையை அனுபவிக்கும் எம் பாலினத்தோருக்கு குடும்பமும் சமூகமும் அரசும்  எம்பாலினத்தோர்தான்.அப்படியிருக்க எம்பாலினத்தரோடு குழுமி வாழவிடாமல் ,பிச்சையாலும் பிழைக்க விடாமல்,காப்பகங்களில் எம்மை அடைத்து ஒடித்து ரசிக்க இருக்கிறது இந்த தூய்மை இந்தியா.!

மத்திய அரசு ஒரு நாட்டாண்மை மனோபாவத்தோடு கூறுகிறது. "கல்வி,வேலைவாய்ப்பில் யாரும் எங்களை புறக்கணிக்கக் கூடாதாம்" இவர்களின் இந்த அக்கரையில் நாங்கள் பூரித்துப் போவோம் என்று நினைக்கிறார்கள் போலும்!. நாங்கள்  கேட்பது "கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடே"...
இடப்பங்கீடு கட்டாயமானால் புறக்கணிப்புகள் குறையும்.இதைத்தான் இடப்பங்கீட்டை அனுபவிக்கும் சமூகத்தோரின் வாழ்வியல் நமக்கு எடுத்துரைக்கிறது.இடப்பங்கீட்டின் நோக்கமே புறக்கணிப்பை ஒழித்து சமத்துவத்தை நோக்கி உந்தித் தள்ளுவது தான். இடப்பங்கீட்டைப் பற்றி பேசாமல் சலுகைகளை மட்டும் குறிப்பிட்டடுச் செல்கிறது  சமூகநீதிக்கெதிரான இந்த அரசு.

Photo courtesy:JhalkaribaiLightSociety


இன்னுமொரு வினோத அறிவிப்பையும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மாற்றுப்பாலினத்தோர் பிச்சையெடுத்தலை உடனடியாக நிறுத்த வேண்டுமாம்.!  70 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பாலினத்தோர்  கை தட்டிப் பிச்சையெடுத்த காசை  வரியாக பிடிங்கித் தின்ற அரசு எங்களுக்கான மாற்றுவழியை பற்றி எதுவுமே குறிப்பிடாமல் திடீரென எங்களைக் குற்றவாளிகளாக மாற்றுகிறது இந்த காவியில் ஒளிரும் டிஜிட்டல் இந்தியா.

மத்திய அரசே.....
எஙளுக்கான இடப்பங்கீட்டு உரிமை எங்களுக்கு கிடைக்கும் வரை பிச்சைக் கேட்டு ஒலிக்கும் எங்கள் குரல்களும் தாழும் கரங்களும்  முஷ்டியை உயர்த்தி முழக்கமிட்டுக் கொண்டே இருக்கும் "எங்களுக்கான இடப்பங்கீட்டு உரிமையை வழங்கிடு...!"

ஏனெனில் நாங்கள் கோருவது பிச்சையல்ல எங்களுக்கான உரிமை...!

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016