கருணைக் கொலை செய்யுங்கள்…!

கருணைக் கொலை செய்யுங்கள்…!

இந்தியாவின் பிரதமர் அவர்களுக்கும் குடியரசு தலைவர் அவர்களுக்கும்… வணக்கம்…!

    இந்த ’’சுதந்திர’’ தேசத்தில் இம்மண்ணின் மைந்தர்களாகப் பிறந்து ரத்த உறவுகளால்,சொந்த அரசினால்,சுற்றி நிற்கும் சமூகத்தினால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தோர் அனுபவிக்கும் கொடிய துக்கம் சிந்தும் வெண் ரத்தத்தையும் செங்குருதியையும் மையாய் உறிஞ்சி எழுத்துக்களாய் உருட்டி உங்களுக்கு கடைசிய்யாய் ஒரு கோரிக்கை வைக்கிறேன் எங்களைக் கருணைக் கொலையாவது செய்யுங்கள்…!

Image result for mercy killing
   
’’மாற்றுப் பாலினத்தோர் பாதுகாப்பு மசோதா 2016(The Transgender Persons(Protection of Rights)bill,2016’’ல் இந்திய ஜனநாயகம் அதன் உட்கரு ஆற்றலைத் துறந்து ஒரு வகையான வினோத நச்சு செயல்களை எங்கள் மீது உமிழ்ந்து வருகிறது.நீங்கள் உமிழும் நச்சுப் பட்டு எங்கள் உயிர் துடி துடித்துக் கொண்டிருக்கிறது…துடிதுடிப்பின் சித்ரவதையை விட உயிர் துறப்பு எவ்வளவோ மேலானது.அகையினால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள்…!

அரசியலமைப்புச் சட்டமும் நீதித்துறையும் நிர்வாகமும் பிரிதிநிதித்துவ அவைகளும் ஒன்றுக்கொன்று முரண் நின்று ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.உங்களால் தீட்டப்பட்டிருக்கும் கேள்விக் குறியின் அடியில் வீழ்ந்து கிடக்கும் சிறு புள்ளி போல நாங்கள் கிடப்பதை விட இறப்பதே மேல்..! ஆகையினால் எங்களை கருணைக் கொலை செய்வீர்…!

2014 ஏப்ரல் 15 ல் உச்சநீதி மன்றத் தீர்ப்பு அதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த திரு.திருச்சி சிவா அவர்கள் மாநிலங்களவையில் கொண்டு வந்த தனி நபர் மசோதா ஆகிய இரண்டில் உள்ளடங்கியிருந்த ஜீவனைப் பறித்துவிட்டு எங்கள் சமூகத்திற்கு மேலும் தீங்கு இழைக்கக் கூடிய,எங்களின் பிச்சையீட்டும் கரங்களை உங்களின் அதிகாரத்தால் ஒடுக்கக் கூடிய,  எங்களை குற்றவாளியாக சித்தரிக்கக் கூடிய ஒரு மசோதாவை கொண்டுவரத் துடித்துக் கொண்டிருக்கிறது நீங்கள் இணைந்து தலைமை வகித்துக் கொண்டிருக்கும் ஆட்சி.

 உங்களின் சமூக நலம் அதிகாரமளிக்கும் துறை கொண்டுவரத் துடிக்கும் அம்மசோதாவில் ‘நாங்கள் பிச்சையீட்டக் கூடாது…பாலியல் தொழில் செய்யக் கூடாது…பாதுகாப்பிற்காக எங்கள் சமூக முன்னோர்களிடம் அடைக்களம் புகக் கூடாது….அதே நேரத்தில் எங்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இடப்பங்கீடும் கிடைக்கக் கூடாது’’ இத்தகைய ஒரு வினோத மசோதா சட்டமாக இயற்றப்பட்டால் நாங்கள் உயிருள்ளப் பிணங்களாவோம் என்பது எங்களால் மிகத் துள்ளியமாக உணரமுடிகிறது.வாழ்வில் சம உரிமையற்று நாங்கள் உயிருள்ள பிணமாய் உழல்வதை விட உண்மையான பிணங்களாய் விழுவதே மேல் ஆகையால் எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள்…!

Image result for mercy killing

  மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறப்பான தனி நபர் மசோதாவை நிறுத்தி மக்களவையில் எங்களுக்கு பாதகமான வேறொரு மசோதாவை நீங்கள் கொண்டு வந்தாலும் அதை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 32 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய நிலைக் குழுவிடம் எழுத்தறிக்கையாக எங்களின் கோரிக்கைகளை  முன் வைத்தோம்.நிலைக் குழுவும் ‘கண்டிப்பாக எங்களுக்கு இடப்பங்கிடு வழங்க வேண்டும்’ என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.ஆனால் அமைச்சகம் இம்முக்கியப் பரிந்துரையை நிராகரித்து ஜனநாயகத்தைப் பறித்திருக்கிறது.இத்தகைய ஜனநாயகப் பறிப்பை எதிர்த்து நாங்கள் அரசிடம் முறையிட்டுப் பார்த்தோம்,ஜனநாயக ரீதியில் முழங்கிப் பார்த்தோம்,முழக்கமும் முறையிடலும் புறக்கணிக்கப்படும் நாட்டில் வாழ்வதை விட சாவதே மேல் ஆகையால் எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்…!




Comments

  1. honourable president please do good things for this genders they are affected more

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016