வைரவிழா நாயகனுக்கு வாழ்த்து மடல்..

பெரு மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய மகத்தான அரசியலாளர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு...!



2017 ஜூன் 3 தங்களின் 94 அகவையில் 60 ஆண்டு சட்டமன்ற பணி வைர விழா ஏற்பாட்டை கேள்வியுற்று மனமகிழ்வடைகிறேன். தமிழரின் வரலாற்றில் தங்களின் மகத்தான அரசியல் வாழ்வு முக்கனியில் இனிய சாராய் புதைந்து அதி ருசியூட்டுவதாய் இன்றும்,என்றும் இருக்கும். தாங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதை எண்ணி பேரின்பம் கொள்கிறேன்..!





விளிம்பு நிலைச் சமூகமான மாற்றுப் பாலின சமூகத்தின் கொடிய,நுண்ணிய வேதனைகளை கூர் அறிவாற்றலால் உணர்ந்து மாற்றுகள் பல முன் வைத்து மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் நீங்கள் ! எங்கள் பாலினத்தின் தற்போதைய சிறு முன்னேற்றத்திலும் பெறும் பங்கு தங்களுடையது என்பதை திநங்கைச் சமூகமான என் சமூகம் நன்கு உணர்ந்திருக்கிறது.
`ஒம்போது`,`அலி`,`பொட்டை` என்றெல்லாம் பிறரால் கேவலமாக விளிக்கப்பட்டு கொரூர இழிவு செய்யப்பட்ட என் சமூகத்தை ;மாற்றுப் பாலினத்தோர்`,`திருநங்கையர்` என பெயரிட்டு பல பெரும் மேடைகளிலும் அச்சு,காட்சி ஊடகங்களிலும் இப்பெயரை பிரச்சாரித்து எங்கள் இழி துடைக்க தாங்கள் அரும் பாடுபட்டதையும்,இந்தியாவிலேயே முதலாய் எங்கள் பாலினத்திற்கு தனியாய் நலவாரியம் அமைத்து எங்கள் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தியதையும் இவ்வைர விழாவில் பாசத்தோடும் பணிவோடும் நினைவு கூர்கிறோம் ! 



இந்த இந்திய ஜனநாயகம் பாலின புரிதலற்று இயங்குகையில் அதன் காதில் மாற்றுப் பாலினத்தோரின் சமூக நீதியை ஓங்கி ஒலித்தவர் நீங்கள்.உங்களின் கருத்துகளாலும் கட்டளைகளாலும் வழிநடத்தப்பட்ட திரு. திருச்சி சிவா அவர்களின் தனி நபர் மசோதா இந்திய ஜனநாயகத்தின் முன்னால் மட்டுமல்ல உலக ஜனநாயகத்தின் முன்னும் மாற்றுப் பாலினத்தோரின் ஞாயங்களை முன் வைத்து சமூக நீதி காத்தது.
2014 ல் இந்தியாவிலேயே திருநங்கை எனும் பாலின சுய அடையாளத்துடன் நான் பொறியியல் கல்லூரி சேர்ந்த போது அதற்காக மறுநாள் முரசொளியில் நீங்கள் என்னை வாழ்த்திய போது ஒட்டு மொத்த ஆனந்தத்தை அன்றே பருகியதாயுணர்ந்தேன் ! என்னை வாழ்த்திய மகத்தான வாழ்த்துரையாளருக்கு, என் சமூகத்தின் விடுதலைக்காய் உழைக்கும் மகத்தான அரசியலாளருக்கு என் சார்பிலும் என் சமூகத்தின் சார்பிலும் இதயபூர்வ வாழ்த்துகளை பரிசளிக்கிறேன்...

மகத்தான அரசியலாளரே......
நீரும் உம் சமூக நீதியும் என்றென்றும் நீடூடி வாழியவே,,,!


....மதிப்பிற்குரிய மங்கை பானு
 
#TransLivesMatter
#WewantTransReservation

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016